‘‘ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவா தலைவர். இதில் அதிமுகவினர் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், 1995-ல் உச்ச நீதிமன்றம் இந்துத்துவா பற்றிய தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இந்துத்துவா என்னவென்பது பற்றிய வழக்கின் தீர்ப்பு அது. அதனை அதிமுக தலைவர்கள் படிக்க வேண்டும்’’ என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறுகையில், ‘‘பாஜக நிர்வாகிகள் உடன் தேர்தல் குறித்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது. ஜூன் 4-ல் மோடி 3-வது முறையாக ஆட்சியமைக்கும்போது தமிழகத்தில் இருந்து பாஜக எம்பிக்கள் செல்வார்கள் என்பதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறோம். இந்த 6 கட்ட தேர்தலில் மக்களின் எழுச்சியை பார்க்கும்போது பாஜக தேசிய அளவில் தனியாக 370 இடங்களில் வெல்லும் என்பது தெரிகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. எங்கள் பார்வையில் நிறைய இடங்களில் மும்முனை போட்டியாக இருந்தது. கடைசி ஒரு வாரத்தில் அது இருமுனை போட்டியாக மாறியது. ஏற்கெனவே கூறியது போல், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி இரட்டை இலக்க இடங்களில் வெல்லும். நிறைய இடங்களில் கடுமையான போட்டி இருந்தது உண்மை. வெற்றி வித்தியாசம் மிக குறைவாக இருக்கும் என்று கணித்துள்ளோம்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை பெரிய தலைவர்கள் இம்முறை போட்டியிட்டனர். எங்களின் எண்ணம், இரட்டை இலக்கை வெல்வோம் என்பதில் தெளிவாக உள்ளோம்.

பெங்களூரு மத்திய தொகுதியில் டெபாசிட் இழந்த நடிகர் பிரகாஷ் ராஜ். ஒரு நடிகராக அவருக்கு மரியாதை உண்டு. அதை தாண்டி அரசியலில் அவரின் குரலுக்கு மரியாதை அளிக்க விரும்பவில்லை. பெங்களூரு மத்திய தொகுதியில் டெபாசிட் இழந்ததே அவரின் அரசியல் அனுபவம். மோடியை திட்டுவதை மட்டுமே தனது முழுநேர வேலையாக கொண்டுள்ளார் அவர். எனவே, பிரகாஷ் ராஜ் பேசுவதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள போவதில்லை. கடவுள் அனுப்பியதாக பிரதமர் மோடி பேசியதை திரித்து இங்கே சிலர் மேடையில் பேசுகிறார்கள். பிரதமர் மோடி இந்தியில் பேசுவதை புரியாமல் இங்கு பேசினால் அதற்கு என்ன பதில் சொல்வது?.

திருமாவளவன் ஒரு எம்.பி. பொறுப்பாக பேச வேண்டிய நபர் அவர். அண்ணன் திருமாவளவனுக்கு எனது ஒரு வேண்டுகோள்… பேசும்போது தான் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை உணர்ந்து பேச வேண்டும். மோடி எதிர்ப்பு என்பதை பல எல்லைக்கு கொண்டுச் சென்றுள்ளதை மோடியே கூறி வருகிறார். நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை மாற்று கட்சியினருக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது. ஸ்டாலின் மாதிரி நாங்கள் இரவு இரண்டு மணிக்கு யாரையும் கைது செய்ய மாட்டோம். திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் கருத்துரிமையை பேசுவது தான் வேடிக்கையாக உள்ளது.

மாடுகளை சாமியாக கும்பிடுபவன் நான். மாட்டை வைத்துதான் எனது பிழைப்பு இருக்கிறது. விவசாயியாக மாடுகளை வைத்து தான் தொழில் செய்கிறேன். அதற்காக மாட்டு இறைச்சி சாப்பிடுபவர்களை சாப்பிடக் கூடாது என்று நான் சொல்லமாட்டேன். அது அவர்கள் உரிமை. ஆனால், என் வீட்டுக்கு விருந்தினர்கள் வரும்போது நான் கொடுக்கும் உணவை தான் சாப்பிட முடியும். மகாத்மா காந்தி தனது புத்தகத்தில் மாட்டு இறைச்சி குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என்பதை ஒருமுறை ஈவிகேஎஸ் இளங்கோவன் படிக்க வேண்டும்.

ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவாவாதி. இதில் அதிமுகவினர் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், 1995-ல் உச்ச நீதிமன்றம் இந்துத்துவா பற்றிய தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இந்துத்துவா என்னவென்பது பற்றிய வழக்கின் தீர்ப்பு அது. அதனை அதிமுக தலைவர்கள் படிக்க வேண்டும். இந்துத்துவா என்பது வாழ்க்கை முறை. அது மதம் கிடையாது. அனைவரையும் அரவணைப்பது தான் இந்துத்துவா.

1984ல் ஜெயலலிதா ராஜ்ய சபா எம்பியாக நாடாளுமன்றத்தில் பேசும்போது, ஜம்மு காஷ்மீரில் ஆர்டிக்கள் 370-ஐ எடுக்கப்பட வேண்டும் என்று பேசினார். ஆனால், இன்றைக்கு ஆர்டிக்கள் 370 பற்றி அதிமுகவின் நிலைப்பாடு என்ன. இதேபோல் 1992-ல் கரசேவை என்பது தவறான வார்த்தை கிடையாது என்று அதற்கு ஆதரவாக பேசினார் ஜெயலலிதா. கரசேவையை காரணம் காட்டி பாஜக ஆட்சி கலைக்கப்பட்டதை கடுமையாக எதிர்த்தார் அவர். இதேபோல், அதிமுக தொண்டர்கள் மத்தியில் ராமர் கோயில் கட்ட கையெழுத்து இயக்கம் நடத்தினார். அதன் நிறைவு விழாவில் அத்வானி பங்கேற்றார்.

அதேபோல் பொது சிவில் சட்டம் வேண்டும் என்றும் பேசிய ஜெயலலிதா, ராமர் சேது பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க சொன்னார். ஆனால் இன்றைக்கு அதிமுகவின் நிலைப்பாடு என்ன, ஜெயலலிதாவின் கொள்கைகளில் இருந்து தற்போதைய அதிமுக விலகி செல்கிறது. நான் கூறுவதை அதிமுக எதிர்த்தால் விவாதத்துக்கு பாஜக தயாராக உள்ளது. எஸ்டிபிஐ கூட்டணிக்காக மாற்றி பேச வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு எழுந்துள்ளது.

ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்னையில் தகர்க்கபட்ட போது அதனை கட்டிக்கொடுப்பதாக சொன்னார் ஜெயலலிதா. இப்போது சொல்லுங்கள் அவரை இந்துத்துவாவாதி என சொல்வதில் என்ன தவறு” என்று கேள்வி எழுப்பினார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஜெயலலிதாவை ஒரு இந்துத்துவா தலைவராக சித்தரிக்க முயல்கிறார். முதலில் அ.தி.மு.க.வின் வரலாற்றை அண்ணாமலை தெரிந்துகொள்ள வேண்டும் என அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார்.

அதாவது, அதிமுகவை தொடங்கிய மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன்சட்டமன்றத்திலும், பத்திரிகையாளர் சந்திப்பிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிரான கருத்துகளைப் பேசி இருக்கிறார். அவரது பேச்சுகள் பற்றி முதலில் அண்ணாமலை தெரிந்துகொள்ள வேண்டும்.

1982ஆம் ஆண்டு மார்ச் மாதம் சட்டசபையில் பேசிய அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர், ‘‘இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்துகிறார்கள். இந்தப் பேரணியால் நாட்டுக்கு நன்மையா? என சிந்திக்க வேண்டும். இந்து முன்னணிக்காரர்களுக்கு யோசனை சொல்லும் மடாதிபதிகளுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இதுபோன்ற செயல்களை அரசு அனுமதிக்காது. குன்றக்குடி அடிகளார் நடந்து கொள்வதுபோல மற்ற மடாதிபதிகள் நடந்து கொள்ள வேண்டுமே தவிர, மற்ற வழிமுறைகளில் இறங்கக் கூடாது.

அச்சுறுத்தல் பயிற்சிகளை அரசு ஏற்றுக் கொள்ள முடியாது. குறிப்பாக சொல்கிறேன், ஆர்.எஸ்.எஸ் தனது பயிற்சிகளை நிறுத்தியாக வேண்டும். ஏற்கனவே என்.சி.சி சாரணர் பயிற்சிகள் இருக்கின்றன. இந்த பயிற்சிகளே போதும். ஆர்.எஸ்.எஸ் பயிற்சிகள் தேவையில்லை.” என அப்போது எம்.ஜி.ஆர் சட்டசபையில் பேசியிருக்கிறார்.

இதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கடுமையாக எதிர்வினையாற்றினார். இதையடுத்து, டெல்லி சென்ற எம்.ஜி.ஆரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சூழ்ந்து முரட்டுத்தனமாக நடந்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தன்னிடம் நடந்து கொண்ட முறை பற்றி 17-&2&-1983ல் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார் எம்.ஜி.ஆர். அப்போது ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் தடை செய்யப்படுமா? எனக் கேட்கப்பட்டதற்கு எம்.ஜி.ஆர்.கூறிய பதில் இதோ…

‘‘டெல்லியில் நான் தமிழ்நாடு மாளிகையில் இருந்து மத்திய அமைச்சர்களைப் பார்க்கப் புறப்பட்ட நேரத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் “இந்து மஞ்ச்” என்ற பெயரில் 45 வயதுக்காரர்கள் என் முன்னால் நின்று கொண்டு, தமிழ்நாட்டில் 5 ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சுடப்பட்டதாகச் சொன்னார்கள். எம்.ஜி.ஆர் ஒழிக என்று கோஷம் போட்டார்கள். அவர்கள் நடந்து கொண்ட முரட்டுத்தனமான செயலைப் பார்க்கும்போது இதுதான் ஆர்.எஸ்.எஸ் இயக்கமா என்று நினைக்கத் தோன்றியது.

இதுதான் ஆர்.எஸ்.எஸ் என்றால் அது இந்த நாட்டுக்கும், தமிழ்நாட்டுப் பண்புக்கும் ஒத்துவராது. என்னைத் தடுக்கும் அளவிற்கு மட்டமாக நடந்துகொண்டார்கள். இந்து மதத்தை இப்படியெல்லாம் காப்பாற்றிவிட முடியாது. தமிழ்நாட்டில் இவ்வளவு கீழ்த்தரமான அனுபவம் எனக்கு இதுவரை நடந்ததில்லை. இதைப் பார்த்த பிறகு அந்த அமைப்பின் மீது எனக்கு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது’’எனப் பதிலளித்தார் எம்.ஜி.ஆர்.

ஆக மொத்தத்தில் எம்.ஜி.ஆர். வழிவந்த ஜெயலலிதாவை ஒரு இந்துத்வா தலைவராக தமிழக பா.ஜ.க.வினர் சித்தரிக்க முயற்சிக்கிறார்கள் என அ.தி.மு.க.வின் எம்.ஜி.ஆர்.காலத்து மூத்த நிர்வாகிகள் கடும் குற்றம் சாட்டுகின்றனர்.

இதற்கிடையே ஜெயலலிதாவை அண்ணாமலை ஒரு இந்துத்துவா தலைவர் என்று கூறியதற்கு ஓ.பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதுதான் இன்னொரு பக்கம் கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal