மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க. 400 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் வெல்லும் என மோடி உள்பட பா.ஜ.க.வினர் கூறிவந்தனர். ஊடகங்களில் வந்த கருத்துக்கணிப்புகளும் 300 முதல் 350 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகின.

முதற்கட்ட வாக்குப் பதிவு முடிந்த பிறகு, கர்நாடகாவில் பாலியவிவகாரம் விஸ்வரூபம் எடுத்த பிறகு பா.ஜ.க. 400 இடங்களில் வெல்லும் என யாரும் உறுதியாக அடித்துக் கூறவில்லை. காரணம், ‘மேலிடத்திற்கே’ உளவத்துறை மூலமாக சென்ற தகவல்கள் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. அதன் பிறகுதான் பிரதமர் மோடியின் பேச்சில் அனல் பறந்தது. அதாவது, ‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெற்றால், ராமர் கோவிலை புல்டோசர் கொண்டு இடிப்பார்கள் என்று கூறினார்.

பிரதமர் மோடியின் இந்தப் பேச்சை அக்கட்சியினரே ஏற்றுக்கொள்ளவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் எத்தனைக் கோவில்களை இடத்தார்கள் என்று கேள்வி எழுப்பினார்கள். ஒடிசாவில் போய் ‘இங்கே உள்ள கீ தமிழகத்தில் இருக்கிறது’ என்றார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘தமிழர்களை திருடர்கள்’ என்கிறார் பிரதமர் மோடி என்று கூறினார்.

இன்னொரு காரணத்தையும் சொல்லிகிறார்கள். காங்கிரஸ் 50 இடங்களைக் கூட பெறாது என்று சொல்லும் பா.ஜ-.க., ‘இண்டியா’ கூட்டணி வென்றால், ஐந்து வருடத்திற்கு ஐந்து பிரதமர்கள் இருப்பார்கள்’ என அமித் ஷா பேசுகிறார். 50 இடங்களைப் பெறாத கட்சி எப்படி ஆட்சியமைக்கப் போகிறது…. எதற்காக அமித் ஷா இப்படி பேசுகிறார்…? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

பி.ஜே.பி. தலைவர்களின் இந்தப் பேச்சின் பின்னணியில் இருப்பது, ‘மேலிடத்திற்கு’ உளவுத்துறை மூலம் கிடைத்த தகவல்கள்தான் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். கடந்த தேர்தல்களில் பி.ஜே.பி.யின் வெற்றியைப் பார்த்தாலே நடப்பு மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி.க்கான செல்வாக்கை புரிந்துகொள்ள முடியும்.

2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக 303 இடங்களில் வென்றது. தற்போதைய தேர்தலில் 400 இடங்களைக் கைப்பற்றுவோம் என்கின்றனர் பாஜக தலைவர்கள். மொத்தம் 543 தொகுதிகளில் பாஜக கூட்டணியால் 400 இடங்களைக் கைப்பற்ற முடியுமா? சாத்தியம் இருக்கிறதா? தென்னிந்தியாவின் 132 தொகுதிகளை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் சாத்தியம் குறைவுதான். தமிழ்நாடு, கேரளாவில் பாஜக ஒன்றிரண்டு தொகுதிகளில்தான் வெல்ல முடியும். ஆந்திரா, தெலுங்கானாவிலும் ஏறத்தாழ இதே நிலைமைதான். கர்நாடகாவில் மட்டும்தான் டபுள் டிஜிட் இடங்களைப் பாஜக பெற முடியும் என்ற நிலை, ‘பாலியல்’ விவகாரத்தில் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. ஆகையால் தென்னிந்திய மாநிலங்களில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே பாஜகவால் 400-க்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்ற முடியும்.

சரி பாஜகவுக்கு எத்தனை இடம்தான் கிடைக்கும்? 2019 தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பாஜக 30 தொகுதிகளை இழந்தால் பெரும்பான்மைக்கான 272 இடங்களைக் கைப்பற்ற போராட வேண்டியதிருக்கும். அதேநேரத்தில் பாஜகவின் கூட்டணி கட்சிகள் 30, 40 தொகுதிகளில் வென்றாலே மீண்டும் பாஜகதான் ஆட்சி அமைக்கும் நிலைமை உருவாகும். பாஜகவுக்கு 240 முதல் 260 இடங்கள் கிடைக்கக் கூடும் என்கிறார் தேர்தல் வியூக வல்லுநர் யோகேந்திர யாதவ். இதனை மற்றொரு தேர்தல் வியூக வல்லுநராக பிரசாந்த் கிஷோரும் ஆமோதிப்பதைப் போல எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

யோகேந்திர யாதவின் கணிப்பின் படி காங்கிரஸ் கட்சி 100 இடங்களையும் இந்தியா கூட்டணியில் உள்ள இதர கட்சிகள் 100 இடங்களைப் பெறும் சூழ்நிலை ஏற்பட்டாலும் பெரும்பான்மையை இந்தியா கூட்டணியால் பெற்றுவிட முடியுமா? என்பது கேள்விக்குறிதான்.

2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக சுமார் 1 லட்சத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதிகள் 77. இதில் 40 தொகுதிகளில் சொற்ப எண்ணிக்கையில்தான் பாஜக வெல்லவும் முடிந்ததது. இந்த 40 தொகுதிகளை பாஜக மீண்டும் கைப்பற்றுமா? என்பதை உறுதியாக சொல்லவும் இயலாது. பாஜக ஆட்சி அமைப்பதில் இந்த 77 தொகுதிகள் மிக முக்கிய பங்கை வகிக்கக் கூடும் எனவும் தேர்தல் வியூக வகுப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த 77 தொகுதிகள் பாஜகவை விட்டு போனால் 210 முதல் 230 இடங்களைப் பெறக் கூடிய நிலைமைதான் உருவாகும். அப்போது பாஜகவின் கூட்டணி கட்சிகள் கை கொடுக்கும் அல்லது இந்தியா கூட்டணி உடைக்கப்பட்டு புதிய ஆட்சியை பாஜக அமைக்கும் முயலும்.

அதே சமயம், ‘இண்டியா’ கூட்டணி மார்ஜினை தொட்டாலே, கடந்த பத்தாண்டுகளில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பட்ட பாட்டை மனதில் வைத்து ‘இண்டியா’ கூட்டணி ஆட்சி அமைப்பதற்கும் வாய்ப்பு இல்லாமல் இல்லை!

உ.பி., பீகார், குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா, பஞ்சாப், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை பி.ஜே.பி. பெறாது என்கிறார்கள் அங்குள்ள ஊடகத்தினர்! எனவே, ஜூன் 4ம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்-..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal