காவலர்கள் பணி செய்யும் உள்ளுர் மாவட்டப் பயணத்திற்கு அரசுப்பேருந்துகளில் இலவசப் பயணம் என்ற தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஐயா ஜி.கே.வாசன் அவர்கள் இன்று (25-05-2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு அரசுப்போக்குவரத்து கழகத்திற்கும், போக்குவரத்துக் காவல் துறைக்கும் இடையேயானப் பிரச்சனையை தீர்க்கும் வகையில் உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். காவலர் சீருடையில் அரசுப்பேருந்தில் பயணம் செய்தபோது பயணச்சீட்டு கேட்டு எழுந்த பிரச்சனையும், போக்குவரத்துக் காவல்துறையினர் அரசுப்பேருந்து ஓட்டுநர்களிடம் சீருடை உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி அபராதக் கட்டணம் வசூல் செய்ததையும் அறிவோம்.
இதனை தமிழக அரசு எக்கோணத்தில் பார்க்கிறது என்று தெரியவில்லை. இப்பிரச்சனையில் தமிழக அரசு கவனம் செலுத்தி தீர்வு கண்டிருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்று திறனாளிகள், முதியோர் அரசுப்பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள தமிழக அரசு இழப்பீடு தொகையை வழங்கி வருகிறது. அதே போல காவல்துறை காவலர்களும் சீருடையில் மாவட்டத்திற்குள் இலவச பயணம் மேற்கொள்ள அரசு இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்.
குறிப்பாக தி.மு.க தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி அரசு ஆணையினை வெளியிட்டு பணி செய்யும் மாவட்டத்திற்குள் காவலர்கள் அரசுப்பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்ள வழி வகுக்க வேண்டும். தற்போதைய காவல்துறையினர் போக்குவரத்து ஊழியர் இடையிலான மோதல் போக்கை நிறுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து சுமூகமான சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். தமிழக அரசு, அரசுத்துறையினருக்கு இடையிலான பிரச்சனையிலே கூடுதல் கவனம் செலுத்தி இந்நேரம் இப்பிரச்சனைக்கு முடிவு ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும்.
ஏன் இந்த கவனமின்மை. வேறு ஏதேனும் பிரச்சனைகளை திசை திருப்ப இது போன்ற காலதாமதத்தை ஏற்படுத்த நினைக்கிறதா. எனவே தமிழக அரசு மாநிலத்தில் அரசுப்பேருந்துகளை இயக்குவதில் காவல்துறையினரால் இடையூறு ஏற்படாது என்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்கள்.