நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மச்சாவு வழக்கில் சுமார் 3 வாரங்களாக எந்தவித துப்பும் கிடைக்காத நிலையில், அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் அன்றைய தினமே தங்களது விசாரணையையும் தொடங்கினர். முதல்கட்டமாக ஜெயக்குமார் உடல் கிடந்த அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் ஆய்வு செய்தனர்.

பின்னர் அந்த கிராமத்தின் நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் உள்பட பலரிடம் விசாரித்தனர். தொடர்ந்து 2-வது நாளான நேற்று அந்த கிராமத்தில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். பின்னர் நேற்று மாலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி தலைமையில் அதிகாரிகள் கரைசுத்துபுதூருக்கு மீண்டும் புறப்பட்டு சென்றனர்.

அப்போது அவர்கள் ஜெயக்குமாரின் குடும்ப உறுப்பினர்களிடம் தங்களது சந்தேக கேள்விகளை கேட்டு அதற்கு விளக்கம் பெற்றனர். இந்நிலையில் இன்று காலையில் போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ், விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் உலகராணி மற்றும் போலீசார் 2 வாகனங்களில் மீண்டும் கரை சுத்துபுதூருக்கு புறப்பட்டனர்.

ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி மற்றும் அவரது மகன்களான கருத்தையா, ஜோமார்ட்டின் ஆகியோரிடம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி அவர்கள் கூறும் தகவல்களை எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்க முடிவு செய்துள்ளனர். மேலும் அவரது வீட்டின் அருகே உள்ள அக்கம்பக்கத்தினரிடமும், நண்பர்களிடமும் விசாரிக்க உள்ளனர்.

இந்த விசாரணை முழுவதும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி முன்னிலையில் முழுக்க முழுக்க நடைபெற்று வருவதால் மர்மச்சாவு வழக்கு சூடுபிடித்துள்ளது. ஜெயக்குமார் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை முடிந்த பின்னர், இறப்புக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal