போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மனைவியிடம், சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர்.

ஆஸ்திரேலியா, மலேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு, 2,000 கோடி ரூபாய்க்கு மேலாக போதைப்பொருள் கடத்திய வழக்கில், தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், 35, கைது செய்யப்பட்டு, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது கூட்டாளிகள், முகேஷ், 33; முஜிபுர், 34 மற்றும் அசோக்குமார், 34; சதானந்தம், 55, ஆகியோரும், அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், காவலில் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

அத்துடன், சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது, அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டில்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, மூன்று நாட்கள் ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளி சதானந்தம் ஆகியோரிடம் சிறைக்கு சென்று விசாரித்துள்ளனர். அதை வீடியோவில் பதிவும் செய்துஉள்ளனர்.

அது மட்டுமின்றி, ஜாபர் சாதிக், திரைப்பட இயக்குனர் அமீர், புஹாரி ஹோட்டல் அதிபர் இர்பான் உள்ளிட்டோர் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடத்தி, 40 கோடி ரூபாய் வரை சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதற்கான ஆவணங்களை கைப்பற்றினர்.

அதன் அடிப்படையிலும், ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் பெற்ற வாக்குமூலத்தின்படியும், ஜாபர் சாதிக் மனைவி அமீனா பானு, 32, என்பவரிடம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று மதியம் 1:00 மணியில் இருந்து, அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது, ‘‘உங்கள் கணவர் போதைப்பொருள் கடத்தல் தொழில் செய்வது எப்போது தெரியும். வெளிநாடுகளில் இருந்து உங்கள் வங்கிக் கணக்கிற்கு எவ்வளவு தொகை வந்துள்ளது?’’ என்று கேள்வி எழுப்பி உள்ளனர். ‘‘அது பற்றி தனக்கு தெரியாது’’ என அமீனா பானு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

‘‘உங்கள் கணவர் தினமும் வீட்டிற்கு வந்து விடுவாரா?’’ என்ற கேள்விக்கு, எப்போதாவது தான் வருவார் என்று கூறியிருக்கிறார்.

இயக்குனர் அமீருக்கு 3.93 கோடி ரூபாயை உங்கள் கணவர் அனுப்பி உள்ளார். அதற்கான தகவல், வாட்ஸாப்பில் அழிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஜாபர் சாதிக் சிறையில் அடைக்கப்பட்ட பின் நடந்துள்ளது. இதன் பின்னணியில் நீங்கள் இருப்பதாக சந்தேகம் எழுகிறது என, கேட்கப்பட்ட மேலும் பல கேள்விகளுக்கு அமீனா பானு மழுப்பலாக பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

உப்பைத் திண்றால் தண்ணீர் குடீத்துத்தானே ஆகவேண்டும்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal