உ.பி., மாநிலம் ஜோன்பூரில் உள்ள அத்தலா மசூதி, 14ம் நூற்றாண்டில் ஹிந்து கோயிலை இடித்து கட்டப்பட்டதாக தொல்லியல் துறை ஆய்வு உள்ளிட்ட ஆதாரங்களுடன் கூடுதல் செஷன்ஸ் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஜோன்பூரில் 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகவும் பழமையான அத்தலா மசூதி உள்ளது. தற்போது இது உ.பி., சன்னி மத்திய வக்பு வாரியத்தின் சொத்தாக உள்ளது. இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் வரலாற்று சின்னமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தலா மசூதி, முன்பு கோயிலாக இருந்ததாக பிரபல வழக்கறிஞர் அஜய் பிரதாப் சிங், ஜோன்பூரின் கூடுதல் செஷன்ஸ் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், ’14ம் நூற்றாண்டில் ஜோன்பூர் பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஜெய்சந்திரா ரத்தோர், அத்தலா மாதா எனும் பெயரில் கோயில் கட்டினார். அதன்பிறகு ஆட்சியை பிடித்த பெரோஸ் ஷா, 1377ல் அக்கோயிலை இடிக்க உத்தரவிட்டார். அப்பகுதியினர் இதனை தடுக்க முயன்றும், முடியாததால் அனைவரும் அந்த பகுதியை காலி செய்துவிட்டு அருகிலுள்ள கிராமங்களில் குடியேறினர். கோயிலை இடித்து அங்கு கட்டப்பட்ட ஷாஹி அத்தலா மசூதியை பெரோஸ் ஷாவுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த இப்ராஹிம் ஷா 1408ல் கட்டி முடித்துள்ளார்.

அந்த அத்தலா மசூதியின் கட்டடங்களில் இன்றும் செம்பருத்தி, திரிசூலம், மணி உள்ளிட்ட ஓவியங்களும், ஹிந்துக் கோயில் கட்டடக்கலை வடிவில் தூண்கள் செதுக்கப்பட்டுள்ளதையும் காணலாம். இவற்றை கோல்கட்டா ஓவியக் கலைக் கல்லூரி முதல்வர் ஈ.பி.ஹவேலி ஆய்வுசெய்து தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டதுடன், இந்திய தொல்லியல் துறை இயக்குநரின் ஆய்வுகளையும் சில வரலாற்று நூல்களையும் இணைத்துள்ளார். இந்த மனுவை நீதிபதி கிரண் மிஸ்ரா விசாரணைக்கு ஏற்றுள்ளார்.

இந்த வழக்கு நாளை மறுநாள் (மே 22) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அயோத்தி வழக்கில் ஹிந்துக்களுக்கு சாதகமான தீர்ப்பை 2019ல் உச்சநீதிமன்றம் வழங்கியது. அதன்பிறகு, வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதி, மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமி கோயிலை ஒட்டியுள்ள ஷாஹி ஈத்கா மசூதி ஆகியவை தொடர்பாக வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ளன. அந்த வரிசையில் ஜோன்பூரில் உள்ள அத்தலா மசூதியும் இணைந்துள்ளன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal