ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன், சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் சித்தூர், கடப்பா, அனந்தபூர் உட்பட பல இடங்களில் ஓய்.எஸ்.ஆர். மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே  மோதல் ஏற்பட்டது. கள்ள ஓட்டு பதிவு செய்ய முயன்றதாக கூறி, இரு கட்சி தொண்டர்களும் மோதலில் ஈடுபட்டனர். கல் வீச்சு அடிதடி மோதல் என தேர்தல் காரசாரமாக முடிந்தது. திருப்பதியில் உள்ள தொட்டாபுரம் வாக்குச்சாவடியில் 2 வாலிபர்கள் வாக்காளர்கள் போல் வரிசையில் நின்றிருந்தனர்.

அவர்களை பார்த்து சந்தேகமடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த துணை ராணுவ வீரர்கள், இருவரையும் தனியாக அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து, நடுரோட்டில் மண்டியிட வைத்தனர். கைகளை மேலே உயர்த்தச் சொல்லி தடியால் அடித்து வெளுத்தனர். அடி தாங்க முடியாமல், கள்ள ஓட்டு போட வந்ததை வாலிபர்கள் ஒப்புக்கொண்டனர். பிறகு, அவர்களை இதுபோன்ற  குற்றச்சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பினர். வாலிபர்களை துணை ராணுவத்தினர் அடித்து வெளுத்த காட்சிகள்  சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal