கடந்த மார்ச் 26 ஆம் தேதி, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை நோக்கி சென்ற ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் எடுத்துச்செல்ல முயற்சி நடந்தது. சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் உணவகத்தில் பணியாற்றும் நபர்கள் அந்த 4 கோடி ரூபாயை எடுத்துச்சென்றபோது ரயில்நிலையத்தில் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பான வழக்கை தற்போது சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் பணத்தை எடுத்துச்சென்ற சதீஷ், நவீன், பெருமாள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் 3 பேரும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய நயினார் நாகேந்திரனின் சட்டமன்ற உறுப்பினர் அடையாள அட்டையை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. மேலும் பாஜக பிரமுகர் கோவர்த்தன் என்பவர் இடைத் தரகராக செயல்பட்டதாகவும், அவரிடம் பணம் பெற்றதாகவும் மூவரும் தெரிவித்தனர். இந்த பணத்தை மக்களவை தேர்தல் செலவுக்காக எடுத்து சென்றதாக விசாரணையில் அந்த மூவரும் தெரிவித்துள்ளார்கள்.

தற்போது மகாராஷ்டிராவில் தேர்தல் பணியில் உள்ள நயினார் நாகேந்திரனிடம் இந்தவாரத்தில் விசாரணை நடத்த சிபிசிஐடி காவலர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal