ஆந்திர மாநிலத்தில் இன்று 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் யார் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார்கள் என மாநிலம் முழுவதும் கோடிக் கணக்கில் பணம் வைத்து பந்தையங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆந்திர மாநிலத்தில் அடுத்ததாக யார் ஆட்சி அமைப்பார்கள்? எத்தனை தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் வெற்றி பெறும்? வெற்றி பெறும் முக்கிய வேட்பாளர்கள் யார் யார்? என்றெல்லாம் ஆந்திர மாநிலத்தில் கோடிக் கணக்கில் பணம் வைத்து பந்தையங்கள் நடைபெற்று வருகின்றன. வீட்டு மனை, நிலம், வீடு, கார், பைக், பணம், தங்கம் உள்ளிட்டவற்றை பந்தையம் கட்டி வருகின்றனர்.

நடிகர் பவன் கல்யாண் போட்டியிடும் பிட்டாபுரம், சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் போட்டியிடும் மங்களகிரி, சந்திரபாபு நாயுடு போட்டியிடும் குப்பம், ரோஜா போட்டியிடும் நகரி, பாலகிருஷ்ணா போட்டியிடும் இந்துப்பூர், முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் நெல்லூர், தர்மாவரம், குண்டூர், குடிவாடா, கன்னாவரம், விஜயவாடா, சீராலா, நத்தன பல்லி, ஆள்ளகட்டா, கடப்பா என பல தொகுதிகளை முன்வைத்து கோடி கணக்கில் பந்தையங்கள் கட்டப்படுகின்றன.

இதில் பல வியாபாரிகள் நடுவராக இருந்து இந்த பந்தையங்களை நடத்தி வருவதாக தெரிகிறது. இவர்கள் கமிஷன் பெற்றுக்கொண்டு பந்தையங்களை நடத்தி வருகின்றனர்.

ரூ.50 ஆயிரம் முதற்கொண்டு ஒரு கோடி வரை பந்தையங்கள் கட்டி வருகின்றனர். பிட்டாபுரம் தொகுதியில் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் தான் வெற்றி பெறுவார் என அங்குள்ள ஒரு வியாபாரி ரூ.2.5 கோடி பந்தையம் கட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

குப்பம் தொகுதியில் சந்திரபாபு நாயுடு, புலிவேந்துலாவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் எவ்வளவு மெஜாரிட்டியுடன் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்தும் பந்தையங்கள் கட்டப்பட்டுள்ளன.

இதில் வேடிக்கை என்னவெனில், பிரச்சார தொடக்கத்தில் ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு அதிகம் பேர் அதிக தொகையில் பந்தையம் கட்டியுள்ளனர். ஆனால், தற்போது அந்த கட்சிக்கு பந்தைய பணம் குறைய தொடங்கி உள்ளது.

ரூ.25 லட்சம் கட்டியவர்கள் தற்போது ரூ.5 லட்சம் கட்டவே யோசிப்பதாக தெரிகிறது. குடிவாடாவில் ஆளும் கட்சியை சேர்ந்த முதல்வர் ஜெகனின் நெருங்கிய நண்பர் கோடாலி நானி போட்டியிடுகிறார். இவர் வெற்றி பெறுவார் என தொடக்கத்தில் 1:10 என பந்தையம் கட்டப்பட்டது. ஆனால், தற்போது அது வெகுவாக குறைந்து விட்டது என அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal