நடிகர் விஜய்யத் தொடர்ந்து, நடிகர் சூர்யாவும் அரசியல் களத்தில் கால் பதிக்க இருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மீது அதிக அக்கறையும் அன்பும் கொண்டவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் சூர்யா. சூர்யா நற்பணி மன்றம் சார்பாக தமிழகத்தில் ஆங்காங்கே பல ஊர்களில் ஏழை எளியவர்களுக்கு பல நல்ல உதவிகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் நற்பணி இயக்கத்தை வலுப்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னணி நடிகரான சூர்யாவிற்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் என்பதை தாண்டி, ஒரு சமூக அக்கறை கொண்ட மனிதராக வலம் வரும் இவர், அகரம் என்கிற அறக்கட்டளை மூலம் ஏராளமான குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். இவரால், அந்த அறக்கட்டளையில் பயிலும் பல மாணவ – மாணவிகளின் கல்வி கனவு நனவாகி உள்ளது. சூர்யாவைப் போல் அவரது ரசிகர்கள் பலர் சமூக அக்கறையோடு பல்வேறு மக்கள் நலப் பணிகளை செய்து வருகின்றனர். சூர்யா ரசிகர் மன்றம் என்பதை தாண்டி நற்பணி மன்றங்களும் செயல்பட்டு வருகிறது.

தற்போது சூர்யா நற்பணி இயக்கம் 60 மாவட்டங்களாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. 60 மாவட்டங்களிலும் வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமிப்பது மற்றும் எதிர்கால திட்டமிடலை முன்வைத்து இயக்கத்தை வலுப்படுத்துவதற்காக தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது சூர்யா நற்பணி இயக்கத் தலைமை.

அந்த வகையில் விழுப்புரம், கடலூர் கிழக்கு, கடலூர் தெற்கு, கடலூர் மேற்கு, புதுச்சேரி, மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில் ஒன்றியம், நகரம், பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.இவர் நற்பணி இயக்கத்தை வலுப்படுத்த முடிவு செய்து இருப்பதால், விஜய் போல இவரும் அரசியலுக்கு வரப்போகிறாரா என அவரது ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். பீரியட் படமாக உருவாகி இருக்கும் இதில் கடந்த காலம், எதிர்காலம் என இரண்டு வெவ்வேறு காலக்கட்டங்கள் காட்டப்படுகிறது.

கங்கா என்ற கதாபாத்திரத்தில் சூர்யா முறுக்கேற்றிய உடம்பு, போர் பயிற்சிகள், ஆதிகால தமிழ், வித்தியாசமான ஹேர்ஸ்டைல் என இந்தப் படத்தில் காணப்படுகிறார். பல கோடி ரூபாய் செலவு செய்தும் இந்தப் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் திருப்தியாக வரவில்லையாம். அதனால், அதை மெருகேற்றும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால்,படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்காமல் உள்ளது குறிப்பிடத் தக்கது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal