தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதில் பி.ஜே.பி. சார்பில் நெல்லையில் வேட்பாளராக நயினார் நாகேந்திரன் களமிறங்கினார்.

நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது. இதனால், நயினார் நாகேந்திரன் அங்கு எளிதாக வெற்றி பெறக்கூடிய சூழல் நிலவியது. அதன் பிறகு அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள்தான் நயினார் நாகேந்திரனை ‘முகாம் மாறும்’ அளவிற்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாக கூறுகிறார்கள்.

இது பற்றி தென்மாவட்டத்தைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம்.

‘‘சார், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வாக இருக்கும் போதே, அவர் நெல்லை தொகுதியின் எம்.பி.யாக போட்டியிட பி.ஜே.பி. தலைமை வாய்ப்பு கொடுத்தது. காரணம், தென்மாவட்டத்தில் குறிப்பாக நெல்லையில் நயினார் நாகேந்திரனுக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது.

இந்த நிலையில்தான், அவருக்காக கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்ட ரூ.4 கோடி பணத்தை பறக்கும் படை போலீசார் கைப்பற்றினார்கள். இதற்கு காரணம் ‘தலைவர்’தான் என பி.ஜே.பி.யிலேயே கிசுகிசுக்க ஆரம்பித்தார்கள்.

தவிர, ‘மேலிடத்தில்’ இருந்து கொடுக்கப்பட்ட விட்டமினையும் நயினாருக்கு கொடுக்கப்படவில்லையாம். அதற்கும் ‘தலைவர்’தான் என நயினார் நாகேந்திரனின் விசுவாசிகள் குற்றஞ்சாட்டினார்கள். காரணம், தமிழகத்தில் பி.ஜே.பி. சார்பில் நயினார் நாகேந்திரன் வெற்றிபெற்றால், கட்சியின் ‘முகமாக’ அவர் மாறிவிடுவார் என்பதால்தான், அவருக்கு எதிராக அக்கட்சியிலேயே உள்குத்து நடந்ததாக சொல்கிறார்கள்.

இந்த நிலையில்தான், எடப்பாடியார் தரப்பில் இருந்து நயினார் நாகேந்திரனுக்கு தூது விட்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு பி.ஜே.பி.க்கு சென்ற நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமியும் நயினாருக்கென்று தனி மரியாதை இன்று வரை கொடுத்து வருகிறார். ஆனாலும் எடப்பாடியின் தலைமையிலான அ.தி.மு.க.விற்கு எதிர்காலம் இருக்குமா… அங்கு போகலாமா…? என யோசித்துக் கொண்டிருக்கிறார் நயினார் நாகேந்திரன்.

இந்த நிலையில்தான், அறிவாலயம் தரப்பில் இருந்தும் நயினார் நாகேந்திரனுக்கு தூது விட்டிருக்கிறார்கள். ‘தி.மு.க.விற்கு வாருங்கள்… உங்களுக்கான உரிய முக்கியத்தும் கண்டிப்பாக கொடுக்கப்படும்’ எனக்கூறி அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

காரணம், நெல்லை தி.மு.க.வில் கோஷ்டிப் பூசல் உச்சத்தில் இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் கோட்டையாக இருந்த ஆலங்குளம் தொகுதியில், உள்குத்து, கோஷ்டிப் பூசல் காரணமாக அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் உள்குத்து, கோஷ்டிப் பூசல் நெல்¬லையில் அதிகரித்து வருகிறது. ஏன், குட்கா வழக்கில் கூட ஒருவர் கைதாகியிருக்கிறார். இந்த நிலையில்தான் நயினார் நாகேந்திரன் போன்ற, அனைவரையும் அனுசரித்துச் செல்லக்கூடிய ஒருவர் வந்தால் நன்றாக இருக்கும் என தி.மு.க. தலைமை முடிவெடுத்து காய் நகர்த்தி வருகிறது. நயினார் நாகேந்திரனின் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’’ என்றனர்.

உள்கட்சியிலேயே நடந்த உள்குத்தால் நயினார் இரண்டாம் இடத்திற்குப் போக இருப்பதாக அவருக்கே தகவல் சென்றதால், அ.தி.மு.க.வா..? தி.மு.க..? என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் நயினார் நாகேந்திரன்..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal