ஆந்திர மாநிலம், மன்யம் மாவட்டம் பழங்குடிகள் அதிகமாக வசிக்கும் மாவட்டமாகும். இங்குள்ள பார்வதிபுரத்தில் நேற்று திறந்த வேனில் நின்றபடி தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: நடைபெற உள்ள தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சின்னமாக விளங்கும் மின்விசிறியின் இறக்கைகள் முறிய வேண்டும்.

இந்த தேர்தலில் பாஜக-தெலுங்கு தேசம்-ஜனசேனா கூட்டணியின் வெற்றி முடிவாகி விட்டது. கடந்த தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ‘நவரத்தினம்’ எனும் தேர்தல் வாக்குறுதியை மக்கள் முன் வைத்து அமோக வெற்றி பெற்றது. அது நவரத்தின திட்டங்கள் அல்ல நவ மோசடி திட்டங்களாகும். நாங்கள் இப்போது கொண்டு வந்துள்ளது சூப்பர் சிக்ஸ் திட்டங்களாகும். இது அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும் திட்டமாகும்.

ஆந்திர மாநிலத்திற்கு இனி நல்ல காலம் தான். வாக்களித்த மக்களுக்கே துரோகம் இழைத்தவர் ஜெகன். அவரால், ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சி முற்றிலும் தடை பட்டு போனது. வேலை வாய்ப்புக்காக அண்டை மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் வளர்ச்சி ஏற்படவேண்டுமானால், பாஜக கூட்டணி ஆட்சி மலர வேண்டும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal