சென்னை மெரினாவில் அமைந்துள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 3 ஆண்டு நிறைவு செய்து, 4ஆவது ஆண்டு தொடங்கியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. கடந்த 2021 மே 7ஆம் தேதி முதல்வராக முதல் முறையாக மு.க. ஸ்டாலின் பதவியேற்றார்.
இந்த மூன்றாமாண்டு திமுக ஆட்சி காலத்தில், அரசு பேருந்துகளில் மகளிர்க்கு இலவச பயணம், மகளிர் உரிமைத் தொகை திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் ,பள்ளிகளில் காலை உணவு என பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களின் வரவேற்பினை பெற்றுள்ளது. இந்நிலையில் மூன்றாண்டுகளில் திமுக ஆட்சி செய்த சாதனைகள் மற்றும் திட்டங்களின் மூலம் பலனடைந்தவர்களின் பேட்டிகளை ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இது சொல் ஆட்சியல்ல செயல் ஆட்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
நான் முதல்வன் திட்டம், கட்டணம் இல்லாத பேருந்து பயணம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அதில் பயன் பெற்றவர்கள் பேட்டிகள் இடம்பிடித்துள்ளன. நாடும், மாநிலமும் பயனுற எந்நாளும் உழைப்பேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.