கடந்த 30-ம் தேதி நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர். ஜெயக்குமார் தனசிங் மரண வாக்கு மூலம் என்ற பெயரில் புகார் மனு திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளரிடம் அளித்ததாக கூறி சமூக வலைத்தளத்தில் பரவி வரும் தகவல் உண்மைக்கு புறம்பானது என நெல்லை மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

நெல்லை மாவன்ன காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் அவரது தோட்டத்திலேயே பாதி எரிந்த நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து நேற்று மாலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிவுற்றது. இன்று காலை 8 மணிக்கு அவரது உடலை உறவினர்கள் மருத்துவமனையில் இருந்து பெற்றுச் சென்றனர். இந்தநிலையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் இறப்பதற்கு முன்பாக மரண வாக்குமூலம் கடிதம் கொடுத்ததாகவும் அதன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லையென புகார் கூறப்பட்டது.

இந்தநிலையில் இது தொடர்பாக நெல்லை போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த 02.05.2024 அன்று ஜெயக்குமார் தனசிங் மகனான கருத்தையா ஜெஃப்ரின் என்பவர் உவரி காவல் நிலையம் சென்று தனது தந்தையை காணவில்லை என புகார் மனு அளித்ததன் அடிப்படையில் உவரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகார் அடிப்படையில் உடனடியாக 3 தனிப்படைகள் அமைத்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், விசாரணையை துரிதப்படுத்தினார். புகாரளிக்க வந்த போது தான் தனது தந்தையின் அறையில் இருந்ததாக குறிப்பிட்டு ஒரு கடிதத்தை காவல்துறையிடம் ஆஜர் செய்தனர். அக்கடிதத்தில் 30.04.2024 என தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அக்கடிதம் புகாரளித்த போது தான் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கு முன்பு யாரிடமும் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் புகார் அளிக்கவில்லை.

விசாரணை தொடர்ந்த போது 04.05.2024 காலை அவரது தோட்டத்தில் எரிந்து நிலையில் பிணமாக ஜெயகுமார் கிடந்ததையெடுத்து, அவரது உடல் மீட்கப்பட்டு வழக்கினை துரிதப்படுத்தும் வகையில் அனைத்து அறிவியல் பூர்வமான நடவடிக்கையையும் எடுக்கப்பட்டுள்ளது. வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்த மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் 7 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என குறிப்பிட்டுள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal