கோவை பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் கோவையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 500 நாட்களே உள்ளன. நாம் அனைவரும் களத்தில் முன்கூட்டியே பணிபுரிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.
இவை அனைத்திற்கும் அடிப்படை களப்பணி தேவை. நம் தொண்டர்கள் ஒவ்வொருவரும் களத்தில் இருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும். விடுபட்டவர்களை இணைக்க வேண்டும். முகவரி மாறியவர்களை கண்டறிந்து பட்டியலில் சேர்க்க வேண்டும். இறந்தவர்களை நீக்க வேண்டும். ஓட்டு இல்லாதவர்களுக்கு ஓட்டு பெற்றுத்தர வேண்டும். பூத் லெவல் கமிட்டிகளை பலமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு வார்டிலும் எத்தனை ஓட்டுகள் விழும் என்று ஆய்வு செய்ய வேண்டும். ஆதரவாளர்கள், நடுநிலையாளர்கள், எதிர்பார்ப்பாளர்கள் என்று மூன்று விதமாக பிரித்து களப்பணி மேற்கொள்ள வேண்டும். பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது அவசியம். மத்திய அரசு திட்டங்கள், அனைத்து தரப்பு மக்களிடமும் போய் சேர வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். ஒரு கட்சியின் வளர்ச்சி என்பது அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதில் தான் உள்ளது. அதை கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்வது அவசியம் ஆகும்.
தற்போது வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் கோவை நிர்வாகிகளும் பங்கேற்று பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். இதன் வாயிலாக அங்கு களப்பணி எப்படி மேற்கொள்ளப்படுகிறது. எந்தெந்த நடைமுறைகளை, எப்படியெல்லாம் பின்பற்றுகின்றனர் என்பதை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.