இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தை கட்சி தமிழகத்தில் காங்கிரசை ஆதரித்து பிரசாரம் செய்தது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் 5 தொகுதிகளில் விடுதலை சிறுத்தை போட்டியிட்டது. அதில் ஒரு தொகுதியில் வாபஸ் பெற்றது. மற்றொரு தொகுதியில் மனு நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள 3 தொகுதியில் இளம் வேட்பாளர்களை நிறுத்தியது.
இந்த நிலையில் பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி சிவக்குமார் ஆகியோர் அழைப்பின் பேரில் இருவரையும் திருமாவளவன் சந்தித்து பேசினார். அப்போது குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி, தோல்வி ஏற்படும் நிலையில் தங்கள் கட்சி வேட்பாளர்களால் வெற்றி வாய்ப்பு இழக்கின்ற நிலையை தவிர்க்கவும் பா.ஜ.க.வை ஒன்று சேர்ந்து வீழ்த்தவும் இதுவே நல்ல நேரம் என்பதால் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வேண்டும் என சித்தராமையா வலியுறுத்தினார்.
அதனை ஏற்றுக் கொண்ட திருமாவளவன் விடுதலை சிறுத்தை போட்டியிட்ட 3 தொகுதி வேட்பாளர்களையும் பிரசாரம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். மேலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திருமாவளவன் பிரசாரம் மேற்கொண்டார். இது குறித்து திருமாவளவன் கூறியதாவது:-
கர்நாடக துணை முதல்-மந்திரி சிவக்குமார் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளோம். விடுதலை சிறுத்தை போட்டியிட்ட 3 தொகுதிகளில் பிரசாரம் செய்யவில்லை. பா.ஜனதாவுக்கு எதிரான ஓட்டுகள் பிரிந்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து விடக் கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் பெங்களூர் சென்ட்ரல், தெற்கு, புறநகர் பகுதியில் முக்கிய இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தேன். தேசத்தின் நலன் கருதி இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.