அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்து வருகிறது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

சென்னை மற்றும் புறநகர் மாவட்டச் செயலாளர்கள் ஆகியோருடன் தொகுதி பொறுப்பாளர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேமுதிக உடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிட்டது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக சென்னை மற்றும் புறநகரை சேர்ந்த 9 மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், இதுதவிர ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை தொகுதிகளின் வேட்பாளர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

தேர்தல் பணிகளில் ஏற்பட்ட பிரச்சினைகள், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது, வெற்றிவாய்ப்பு எப்படி என்பது தொடர்பாக அவர்களிடம் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார் என்று சொல்லப்பட்டுள்ளது.

நாளையும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும், நாளை சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது என்றும் ஆலோசனை நடத்தப்படும் என்று அதிமுக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தி.மு.க. தரப்பில் தாராளமாக விட்டமின் பாய்ச்சியதில், சில அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ‘விலை’ போனதாகவும் வெளியான தகவல்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal