தமிழ்நாடு முழுவதும் நேற்று பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த நிலையில் வாக்குச்சாவடியில் ஓட்டளிக்க வந்த நபர் எனக்கு வலது கை விரலில் தான் மை வைக்க வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்ததால் வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விசாரித்ததில் அந்த நபர் ஏற்கனவே ஓட்டளித்துவிட்டது தெரியவந்தது.

தமிழகத்தில் நேற்று பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் பல்வேறு மாவட்டங்களில் வாக்குப்பதிவு விறு விறுப்புடன் நடைபெற்றது. பாராளுமன்றத் தேர்தலில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வழக்கம் போல வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்றது. ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு மற்றும் சின்ன சின்ன சலசலப்புகளை தாண்டி பெரிய அளவில் எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. சில இடங்களில் விதிகளை மீறி வாக்களிக்க முயன்ற சில நபர்களையும் வாக்குச்சாவடி அதிகாரிகள் வெளியே அனுப்பினர்.

அந்த வகையில், கோவை நல்லம்பாளையளம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் ஏற்கனவே வாக்களித்து விட்டு மீண்டும் மற்றொரு வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:- கோவை நல்லம்பாளையம் தண்டல் முத்தாரம்மன் கோவில் பகுதியில் திருநாவுக்கரசு எனபவர் வசித்து வருகிறார்.

52 வயதான இவர், கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நல்லம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்றார். அப்போது வாக்களிக்க விரலில் மை வைப்பதற்காக ஆள்காட்டி விரலை காட்டுமாறு வாக்குச்சாவடியில் இருந்த ஊழியர் கூறினார். இடது கை விரலை காட்டுவதற்கு பதிலாக வலது கை விரலை காட்டினார்.

அதிகாரிகள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர்களிடம் வாக்குவாதம் செய்த திருநாவுக்கரசு , வலது கையில் விரலில் தான் மை வைக்க வேண்டும் என்று அடம் பிடித்தார். இதனால், வாக்குச்சாவடி ஊழியர்களுக்கு அவர் மீது சந்தேகம் வந்தது. இதையடுத்து இடது கை விரலை பார்த்த போது ஏற்கனவே ஓட்டுபோட்டதற்காக மை வைக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து, அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் வாக்குச்சாவடியில் இருந்த அதிகாரியிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தேர்தல் நடத்தும் அதிகாரி, போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் திருநாவுக்கரசை கைது செய்தனர். அவர் மீது போலியான பெயரில் வாக்களித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருநாவுக்கரசுக்கு காந்திபுரம் மற்றும் நல்லாம்பாளையம் ஆகிய இரண்டு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருப்பதாகவும், இதனால், காந்திபுரம் பகுதியில் வாக்களித்துவிட்டு நல்லாம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்துள்ளதாக கூறினார். பல்வேறு இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், ஒரே நபருக்கு இரண்டு இடங்களில் வாக்கு இருந்ததும் அவர் இரண்டு இடங்களில் வாக்களிக்க முயன்றதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal