மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அங்கு தடுப்புசுவர் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதேநேரம் மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு அவர்களுக்கான பாடக்கல்லூரிகள் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் தற்காலிகமாக நடந்து வருகிறது. ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மாணவர்களை போலவே, மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்களும், ராமநாதபுரம் பொது அரசு மருத்துவமனையில் சிகிக்சை அளிப்பது, பயிற்சி பெறுவது என பல்வேறு பாடங்களை கற்று வருகிறார்கள்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆண்டுக்கு 50 பேர் வீதம் கல்வி பயின்று வருகிறார்கள். இவர்களுக்காக மத்திய அரசு நிறுவனமான மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தனி பேராசிரியர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டும் வருகிறது.

இந்தநிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் சரியில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தமிழில் பேசுவதால் எங்களுக்கு மொழி புரியவில்லை. மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் பெரும்பாலும் இந்தி மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் என்பதால், இங்குள்ள சூழலை புரிந்து கொள்ள முடியாமல், நோயாளிகளுக்கு அவர்களின் நோயை கேட்டறியக் கூட அவர்களால் முடியவில்லை. இதுபற்றி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியானது. இந்த விவகாரம் பெரிய அளவில் பேசுபொருள் ஆனது.

இந்த நிலையில்தான் வெளிநாட்டில் மருத்துவம் படித்தவரும், தி.மு.க.வின் முன்னாள் அமைச்சருமான பூங்கோதை ஆலடி அருணா, ‘‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவே இல்லை. மாணவர்கள் மட்டும் எப்படி வந்தார்கள் என்று பார்க்கிறீர்களா? மாணவர்களுக்கு மட்டும் ஒன்றிய அரசு அவசரம் அவசரமாக அனுமதி வழங்கியிருக்கிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தாயுள்ளத்தோடு, அவர்களை ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் படிக்க அனுமதித்திருக்கிறார். இந்த மாணவர்கள் கோபத்தோடு எங்களுக்கு இந்த (தமிழ்) மொழி தெரியவில்லை. தமிழ்நாட்டு சாப்பாடு பிடிக்கவில்லை. இங்கு எங்களுடைய பொருட்கள் எல்லாம் காணாமல் போகிறது. மேலும், எங்களுடைய பண்டிகையை எங்களால் கொண்டாட முடியவில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த மாணவர்களின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. முதலில் நானும் ஒரு மருத்துவம் படித்தவர்… மருத்துவர்களுக்கு ஒரே பணி மக்களின் உயிர் காக்கு பணி. சேவை மனப்பாண்மையுடன் மருத்துவத் தொழிலை செய்ய வேண்டுவே தவிர, பண்டிகைகளை கொண்டாட முடியவில்லை. சாப்பாடு சரியில்லை. மொழி புரியவில்லை என்று குற்றம் சுமத்தக்கூடாது.

இன்றைக்கு மருத்துவர்களுக்கு மொழி மிக மிக அவசியம். பலர் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்கிறார்கள். ரஷ்யாவில் மருத்துவம் படிக்கச் சென்றால், முதல் ஒரு வருடம் ரஷ்ய மொழியை படித்த பிறகுதான், அவர்கள் அங்குள்ள மருத்துவக்கல்லூரியில் படிக்க ஆரம்பிக்க முடியும். மேலும், வெளி மாநிலங்களில் மருத்துவம் படிக்கச் செல்லும் போது, ‘மெடிக்கல் லிங்கோ’ன்னு சொல்லுவார்கள். அதாவது மருத்துவர்கள் நோயாளிகள் கூட உரையாடும் போது, அவர்களுடைய மொழியை புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நோயாளிகளுக்கு என்ன பிரச்னை என்பது மருத்துவர்களுக்குப் புரியும். அதனால், அம்மாநில மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்.

அதுவே கஷ்டமாக இருக்கிறது என்றால், கொள்ளை அளவில் ஒன்றிய அரசு முடிவெடுத்து மொழி பெயர்ப்பாளர்களை பணிக்கு அமர்த்தலாம். கூடுதலாக செயற்கை நுண்ணறிவு செயலி வாயிலாகவும் மொழி பெயர்க்கலாம். அதைவிட்டுவிட்டு, நாங்கள் தமிழ் மொழி படிக்கமாட்டோம். இங்குள்ள சாப்பாடு பிடிக்கவில்லை. எங்களுடைய பண்டிகைகளை கொண்டாட முடியவில்லை என்று மாணவர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விஷயத்தில்தான் பா.ஜ.க. அரசு நம்மை பிளவுபடுத்த முயற்சிக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்போம்’’ என்று கூறியிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal