சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் திருமாவளவன் இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சிதம்பரம் பாராளுமன்ற வேட்பாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். சிதம்பரம் பாராளுமன்றம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குண்டம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. சிதம்பரம் பாராளுமன்றத்தை பொறுத்தவரை 5 வேட்பாளர்கள் கட்சிகளை சார்ந்தவர்களும், 9 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில் திருமாவளவன் கடந்த 15 தினங்களுக்கு மேலாக 6 சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் திறந்தவெளி வாகனத்தில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தொல். திருமாவளவனுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கமலஹாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பரப்புரை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வதால் திருமாவளவன் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். மன்மதசாமி கோயிலில் சாமி கும்பிட்டபின் தனக்காக பரப்புரையைத் தொடங்கினார். வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்துடன் இணைந்து இறுதிக்கட்ட பரப்பரை மேற்கொண்டு வருகிறார். திறந்த ஜீப்பில் நகரில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal