மத்திய சென்னை மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து சென்னை புரசைவாக்கத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது: எவ்வளவு மழை பெய்தாலும் சென்னையில் வெள்ளம் வராது என்று முதல்வர், அமைச்சர்கள், மேயர் என எல்லோரும் கூறினார்கள். மிக்ஜாம் புயலின் ஒருநாள் மழைக்கே சென்னை வெள்ளத்தில் மிதந்தது.

அதிமுகவைப் பற்றியே விமர்சித்துக் கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது ஆட்சியில் செய்ததை சொல்லி வாக்குக் கேட்க முடியவில்லை. பலசரக்கு விலை கடந்த 6 மாதங்களில் 40 சதவீதம் உயர்ந்திருக்கிறது. விலை உயர்வைக் கட்டுப்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் நடைபெறுகிறது. பணம் கொடுக்காமல் எந்த வேலையும் நடப்பதில்லை.

தமிழகத்தில் போதைப் பொருட்கள் எளிதாகக் கிடைக்கின்றன. இதனால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பள்ளி, கல்லூரிகளில் கஞ்சா விற்ற 2,138 பேரை கண்டுபிடித்துள்ள இந்த அரசு, 148 பேரை மட்டுமே கைதுசெய்துள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவையில் எழுப்பிய கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

திமுக அயலக அணியின் துணை அமைப்பாளராக இருந்தவர் போதைப் பொருட்கள் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே கள்ள மதுபானம் தயாரிப்பு ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு பலரும் உள்ளே போவார்கள். திமுக ஆட்சியில் பெண்களுக்கு மட்டுமல்லாமல் காவல்துறையினருக்கும் பாதுகாப்பு இல்லை. 2021 தேர்தலின்போது திமுக அளித்த 520 வாக்குறுதிகளில் 10 சதவீதம் மட்டுமே நிறைவேற்றியுள்ளனர்.

கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை. அதை ஏன் என்று முதல்வர் கேட்கவில்லை. நாங்கள் அல்ல, நீங்கள்தான் கள்ளக்கூட்டணி வைத்துள்ளீர்கள். முதல்வர் அறிவித்தபடியும் பெட்ரோல் விலை முழுமையாக குறைக்கப்படவில்லை.

டீசல் விலையை அறவே குறைக்கவில்லை. நான் அரசியலுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், அரசியலுக்கு வந்து 5 ஆண்டுகள்கூட ஆகாத ஒருவர், 2024 தேர்தலுக்குப் பிறகு அதிமுக இருக்காது என்கிறார். தம்பி உன்னைப் போல எத்தனை பேரை அதிமுக பார்த்துள்ளது.

காணாமல் போனால் நீ போலீஸ்தானே கண்டுபிடித்துக் கொடு. விரக்தியின் விளம்பில்தான் இப்படி பேசுகிறார். பொறுமையாகப் பேசு. அதிமுகவில் 2.16 கோடி பேர் உள்ளனர். உங்கள் கட்சியில் விரல்விட்டு எண்ணும் அளவிலே உள்ளனர். எதைப் பேச வேண்டுமோ அதை மட்டும் பேச வேண்டும்.

உங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தம் இல்லை. அதிமுகவை குறைத்து மதிப்பிட வேண்டாம். அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள்தான் அழிந்து போவார்கள். ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு நீ இருப்பாயா என்று பார்க்கலாம். இவ்வாறு பழனிசாமி பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal