விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் விஜயகாந்த் மகனை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- உங்கள் அண்ணன் மகனுக்கு நீங்கள் பெருவாரியான வாக்குகளை அளிக்க வேண்டும். 32 வயதில் படித்து முடித்துவிட்டு எத்தனையோ கனவுகள் இருந்தாலும் அதை தூக்கி எறிந்து விட்டு தந்தையின் வழியில் மக்கள் சேவை செய்ய இந்த தொகுதியில் அவர் போட்டியிடுகின்றார்.

உங்கள் எல்லாருக்கும் தெரியும் தம்பிக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லை. இந்த விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற பின்னர் இந்த தொகுதி மக்களின் தலைமையில் தான் அவருக்கு திருமணம் நடக்கும். கூட்டணி தர்மத்தை மதித்து மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றேன்.

நமது வேட்பாளர் வயதில் சின்னவர் என்று நினைக்காதீர்கள். அவர் நல்ல அறிவாளி, உலகம் முழுவதும் சுற்றி வந்துள்ளார். பல்வேறு மொழிகளை பேசும் திறமை கொண்டவர். பாராளுமன்றத்தில் உங்கள் பிரச்சனைகளை எழுப்பி அதற்கு தீர்வு காணும் வல்லமை அவரிடம் உள்ளது. குணத்திலும், பழகுவதிலும் கேப்டனின் மறு உருவம். 34 வருடம் கேப்டனுக்கு மனைவியாக வாழ்ந்தும், அவருக்கு தாயாக இருந்தும் சேவை செய்திருக்கிறேன். கேப்டன் இல்லை என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். அவரது ஆசியால்தான் நான் இயங்கி வருகிறேன். இவர் அவர் பேசினார்.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal