‘அதிமுக ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு டிடிவி தினகரன் கைக்கு வந்துவிடும்’ என்று அண்ணாமலை தேனியில் பேசினார். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எதிர்த்து தெரிவித்து வருகின்றனர்.

தேனியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “காண்ட்ராக்டர்களுக்காக ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னர் ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு அதிமுக உண்மையான தலைவரின் கைக்கு வந்துவிடும். முன்னாள் அமைச்சர்கள் 10 பேர் மட்டும் தான் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருப்பார்கள். அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் அண்ணன் டிடிவி தினகரன் பக்கம் வந்துவிடுவார்கள். யார் இங்கே எட்டப்பன் என்பதில் தொண்டர்கள் தெளிவாக இருக்கிறார்கள்” என்று பேசினார்.

அண்ணாமலையில் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசும் போது, “திடீர் சமையல் மாதிரி அண்ணாமலை ஒரு திடீர் அரசியல்வாதி. அவருக்கு வரலாறு தெரியாது. அதிமுக என்பது ஆயிரம் காலத்து பயிர். எங்கள் இருபெரும் தலைவர்கள் கட்டிக்காத்த கட்சி. 31ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி.

பாஜக ஒரு மதவாத கட்சி. அவர்களுக்கு கொள்கையும் கிடையாது ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. தமிழ்நாட்டுல அவங்க கால் உண்றவே முடியாது. கத்திரிக்காய்க்கு கால் முளைச்ச மாதிரி அப்பப்போ வந்து அண்ணாமலை தலையை காண்பிக்கலாமே தவிர வேற ஒண்ணும் செய்ய முடியாது.

லட்சக்கணக்கான கோடி ரூபாயை கடனாக பெற்று வெளிநாடு தப்பிச் சென்ற தொழிலதிபர்களை கைது செய்ய முடியவில்லை, பணத்தை திரும்பப் பெற முடியவில்லை. நிறுவனங்களை மிரட்டி அவர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை தேர்தல் பத்திரம் மூலம் பெற்று அவர்களுக்கு ஆதாயம் அளிக்கும் வகையில் செயல்பட்டுவர்கள் தான் இவர்கள்”,  என்று கூறினார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும் போது, “அண்ணாமலைக்கு நான் பல பதிலடி கொடுத்துட்டேன். அவர் என்ன ஜோசியரா? இல்லை அவர் என்ன விஸ்வாமித்தரரா? எங்க கட்சி அழிஞ்சு போயிடும்னு சாபமிடுவதற்கு?

அவருக்கு அரசியல் தெரியாது. அண்ணா திமுக பீனிக்ஸ் பறவை போன்றது. அண்ணாமலைக்கு கோயம்புத்தூரில் தோல்வி பயம் வந்துவிட்டது. அந்த பயத்தால் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறார். காமெடியனாக மாறிக்கொண்டிருக்கிறார்” என்று கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal