தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி என மும்முனை போட்டி நிலவி வருகிறது. இதுதவிர நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.
கோவை மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை திமுக சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமாரும், அதிமுக சார்பில் அக்கட்சியின் ஐடி விங் மாநிலச் செயலாளர் சிங்கை ராமச்சந்திரனும் களமிறங்கியுள்ளனர். பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் அண்ணாமலை இங்கு நேரடியாக களமிறங்கியுள்ளார்.
இதனால் தமிழகத்தில் உற்று கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக கோவை மாறியுள்ளது. எப்படியாவது கோவையில் வெற்றிபெற்றுவிட வேண்டும் என அண்ணாமலை தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அண்ணாமலைக்கு ஆதரவாக பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் நேரடியாக வந்து பரப்புரை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் அண்ணாமலை இரவு 10 மணியைத் தாண்டி பரப்புரை செய்ததாக திமுகவினர் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக திமுகவினர் மற்றும் பாஜகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பரப்புரை செய்ததாக அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அண்ணாமலையோ, “தேர்தல் விதிகளை நான் மீறவில்லை, தேர்தல் விதிகள் எனக்கு நன்றாக தெரியும். இரவு 10 மணிக்கு மேல் நான் மைக்கில் பேசிய வீடியோ இருந்தால் வெளியிடுங்கள்” என்று சவால் விடுத்தார்.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், “கோவை தொகுதியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் தேர்தல் நடத்தை விதிகளை முற்றிலும் நிராகரித்து வருகிறார்” என்று குற்றம்சாட்டினார்.
கடந்த 12ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் ஆவாரம்பாளையம் பகுதியில் ஒலிபெருக்கியில் வாக்கு சேகரித்துள்ளார் என்றும், பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலர்கள் மௌன சாட்சியாக கடந்து சென்றுள்ளனர் எனவும் குற்றம்சாட்டிய முத்தரசன், தேர்தல் நடத்தை விதிகளை மதிக்காமல் தொடர்ந்து மீறி செயல்பட்டு வரும் அண்ணாமலையின் அத்துமீறல் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.