தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மின்னல் வேகத்தில் தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். இன்று காலை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரோட்டரி நகர் 13வது தெரு, அம்பேத்கர் பாலம், காரணீஸ்வரர் கோயில் தெரு, நொச்சி நகர், லூப் ரோடு, டுமிங் குப்பம், மாதா சர்ச் சாலை, சின்னகார கொட்டா, வெங்கடேச அக்ரகாரம் தெரு, ராமாராவ் ரோடு, பல்லக்குமா நகர், கென்னடி தெரு, கற்பகம்மாள் நகர், வண்ணான் துறை, சர் சிவசாமி சாலை உள்ளிட்ட இடங்களில் தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, பிரபல திரைப்பட பின்னணி பாடகர் டி.எம்.சவுந்திரராஜனின் வீடு அருகே தமிழிசை சவுந்திரராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவரது கொள்ளுப்பேத்தி குழந்தை ஸ்ரேயாவை கொஞ்சி மகிழ்ந்து தாமரை பூவை குழந்தையின் கையில் கொடுத்தார். அந்த குழந்தையும் தாமரை பூ வை தூக்கி காட்டியது. அப்பகுதியினர் உற்சாகமடைந்து தங்கள் ஆதரவை தாமரை சின்னத்துக்கு தெரிவித்தனர். பிரச்சாரத்தின் போது, தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: மக்களோடு மக்களாக இருந்து சேவை செய்வதற்காகவே, ஆளுநராக இருந்தபோது கிடைத்த வசதிகளை எல்லாம் விட்டு விட்டு வந்திருக்கிறேன்.
மயிலாப்பூரில் சட்டமன்ற தொகுதியில் குடிநீர், சாக்கடை, குப்பை பிரச்னைகளை முழுமையாக தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பேன். என்னை பொறுத்தவரை சென்னை நகருக்கு மிகப்பெரிய திட்டம் வைத்திருக்கிறேன். யார் என்ன சொன்னாலும் தென் சென்னையில் பாஜக வெற்றி பெறும். தமிழக பாஜ தலைவராக இருக்கும் போதே இந்த தொகுதியில் முழுவதுமாக சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன். தொகுதி மக்களின் குறைகளை நான் நன்கு அறிவேன்.
பல்லக்கு மாநகரில் வாக்கு கேட்க சென்றேன். அங்குள்ள வீடுகள் அனைத்தும் மோசமாக உள்ளது. இப்படிப்பட்ட வீடுகளில் மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பதை பார்த்து வேதனை அடைந்தேன். மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தெருவில் இறங்கி நான் போராடுவேன். நிச்சயமாகவே எனக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. மக்களிடம் நெருக்கமாக பழகி வருவதால் வெற்றி வாய்ப்பு எனக்கு பிரகாசமாக இருக்கிறது. ஏற்கனவே எனக்கு மக்கள் பலம் இருக்கிறது.
இப்போது கூடுதலாக பிரதமரின் பலமும் கூடுதலாக சேர்ந்துள்ளது. எப்போதுமே அவர் தான் எங்களுக்கு பலம். மற்றவர்கள் வடை சுட்டுக் கொண்டே இருக்கட்டும். ஆனால் நாங்கள் மக்களின் வாக்குகளை சுட்டுக் கொண்டே இருக்கிறோம். ஒன்றிய அரசின் திட்டங்களை எங்களால் தான் இங்கு கொண்டு வர முடியும். தென்சென்னை தொகுதி பாஸ் ஆக வேண்டும் என்றால் தமிழிசைக்கு வாக்களிக்க வேண்டும். நிச்சயமாக இந்த தொகுதி பாஜக தொகுதியாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.