தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் தனது தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் தாமரை சின்னத்துக்கு ஆதரவு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஆளுநராக இருந்து மக்கள் மத்தியில் சாதாரணமாக பேசி பழகி வருவது பொதுமக்கள் மத்தியில் நல்ல இமேஜை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இன்று காலை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மத்திய கைலாஷ், பெருமாள்கோயில் தெரு, எல்லையம்மன் கோயில், மார்க்கெட், மண்ணப்பா தெரு, யாதவர் தெரு, நியூ தெரு, வரதாபுரம், நாயுடு தெரு, லாக் தெரு, கோட்டூர்புரம், சித்ரா நகர், தண்டபானி தெரு, அருணாசலம் தெரு, கோட்டூர் சிக்னல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திறந்த வெளி வாகனத்தில் வீதி வீதியாக சென்று தாமரை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.

பிரசாரத்தின் போது, பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் பேசியதாவது: நான் மீனவர்களுக்காக ஒன்றிய அரசிடம் இருந்து பல்வேறு உதவிகளை பெற்று மீனவ மக்களுடன் ஒரு சகோதரியாக இருந்து வருகிறேன். தென் சென்னையில் வசிக்கும் மீனவர்கள் எனக்கு வாய்ப்பளித்தால் மீனவ மக்களின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் என்றும் துணை நிற்பேன். அவர்களின் வாழ்வு தாமரைப் போல மலரும் என்று உறுதி அளிக்கிறேன். பிரதமர் மோடி, தமிழக மக்களுக்கு நல்லது செய்து கொண்டிருக்கிறார். ஒரு பிரதமர் தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வருவதை பார்த்து சந்தோஷப்பட வேண்டும். ஒரு மாநிலத்தை நோக்கி, இந்த நாட்டை ஆண்டு கொண்டிருப்பவர் வருகிறார் என்றால் மகிழ்ச்சி அடைவதை விட்டு விட்டு ஏன் பதற்றப்படுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

நான் ஆளுநராக இருந்த போது ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் வேலை செய்திருக்கிறேன். அதேமாதிரி இப்போதும் நான் வேலை செய்வேன். எனவே நீங்கள் தாமரையை தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். காலையில் கோயம்பேடு வணிகர்கள் அனைவரும் எனக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தார்கள். கோயம்பேட்டில் தேவையான வசதிகளை செய்து தருவேன் என்று அவர்களுக்கு நான் உறுதி அளித்திருக்கிறேன். பதவிக்கு ஆசை பட்டிருந்தால் ஆளுநராகவே நான் இருந்திருப்பேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக தான் நான் களத்தில் நிற்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal