திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் பிஜேபி வேட்பாளராக திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் களத்தில் நிற்கிறார். காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளராக திசையன்விளை பேரூராட்சி தலைவி ஜான்சி ராணி களத்தில் நிற்கிறார்.

இந்த நிலையில்தான் நெல்லையில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை, பா.ஜ.க. வேட்பாளர் ரேஸில் முந்திச் செல்வதாக உளவுத்துறை மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தகவல் சென்றிருக்கிறது. உடனடியாக நெல்லை தொகுதியில் தனது கவனத்தை செலுத்திய முதல்வர், அங்கு தூத்துக்குடியில் பிரச்சாரத்தில் இருந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை பொறுப்பு அமைச்சராக நியமித்தார்.

நெல்லையில் பிரச்சாரம் செய்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆலடி அருணா படுகொலை செய்யப்பட்டதை பேசி வாக்கு சேகரித்தார் இந்த விவகாரம்தான் நெல்லை தொகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

நெல்லையில் என்ன நடக்கிறது என நடுநிலையான தி.மு.க.வில் உள்ள மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், ஆர்.கே.நகரில் நடந்த இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணியினர் அம்மாவின் சவப்பெட்டியை வைத்து வாக்கு சேகரித்தது கடும் அதிர்வலைகளையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. அதே போல்தான் வாக்கு வங்கி அரசியலுக்காக மறைந்த ஆலடி அருணாவின் மரணத்தை அனிதா ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது நெல்லையில் கடும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

காரணம், அவரது மகள் பூங்கோதை ஆலடி அருணா ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டபோதுகூட, தனது தந்தையின் மரணத்தை வைத்து வாக்கு கேட்கவில்லை. ஆனால், அனிதா ராதாகிருஷ்ணன் இறந்தவர்களை வைத்து அரசியல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தவிர, நெல்லை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளருக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்து வருவது உண்மைதான். அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் ஏராளமாக இருக்கிறது. நெல்லையில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியில் செல்வாக்குள்ள மண்ணின் மைந்தர்களை விட்டுவிட்டு, பக்கத்து மாவட்டங்களில் இருந்து தி.மு.க. பிரமுகர்களை தேர்தல் களத்தில் இறக்கினால் மட்டும் அப்பகுதி மக்கள் ஓட்டுப் போட்டுவிடுவார்களா? நெல்லையில் நடக்கும் உள்ளடி அரசியலில் ஒருசிலரை முற்றிலுமாக ஓரங்கட்டி, தலைமைக்கு உண்மை நிலவரத்தை மறைக்கின்றனர். இதனை எல்லாம் தி.மு.க. தலைமை கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்!

நெல்லையில் நாடார் வாக்குகள்தான் அதிகம் இருக்கிறது. முக்குலத்தோர் வாக்குகள் கணிசமாக இருக்கிறது. நாடார் வாக்குகளும், முக்குலத்தோர் வாக்குகளும் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக திரும்புகிறது. காரணம், முக்குலத்தோர் சமுதாயத்தினரிடமும் நட்புடன் பழகி வருகிறார் நயினார் நாகேந்திரன். தவிர, நாடார்கள் அதிகம் வசிக்கும் சில ஒன்றியங்களில், முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை ஒன்றியச் செயலாளர்களாக நியமித்திருப்பதும் ஒரு காரணம்.

இந்த நிலையில்தான் நயினாருக்கு திரும்பும் முக்குலத்தோர் வாக்குகளை காங்கிரசுக்கு மடை மாற்ற தங்கம் தென்னரசுவை அனுப்பி வைத்திருக்கிறார் முதல்வர். அமைச்சர் தங்கம் தென்னசுவும் மாவட்ட நிர்வாகிகளை அழைத்துப் பேசியிருக்கிறார்.

எனவே, தி.மு.க. தலைமை நெல்லையில் நடக்கும் ‘உள்ளடி அரசியலுக்கு’ முதலில் வைக்க வேண்டும் என நடுநிலையான தி.மு.க.வினர் விரும்புகிறார்கள். முற்றுப்புள்ளி வைத்தால்தான் காங்கிரஸ் வேட்பாளர் கரைசேருவார்’’ என்றனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal