பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு சமூக அமைப்புகள் பிரசாரம் செய்து வருகின்றன. ஆனால் நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நோட்டாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:- மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காட்டு யானைகள், மான், சிறுத்தை, மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை தின்று சேதப்படுத்துவதுடன், மனிதர்களையும் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் வன அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் அரசியல் கட்சிகளை புறக்கணிக்கும் வகையில் நோட்டாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.