‘‘தமிழகத்தில் அ.தி.மு.க.விற்கு ஆதரவான அலைகள் வீசுகிறது’’ என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீரப்பம்பாளையம் பகுதியில் அதிமுக தேர்தல் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசியதாவது:

‘‘நான் செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுக கூட்டணி அலைகளே வீசுகின்றன. தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும். திமுக.,வின் தில்லுமுல்லுவை அதிமுக தொண்டர்கள் முறியடிக்க வேண்டும். திமுக.,வினர் ஆட்சி அதிகாரத்தை வைத்து ஓட்டுகளை பெறும் முயற்சியை முறியடிக்க வேண்டும்.

எடப்பாடி தொகுதி அதிமுக.,வின் கோட்டை; யாராலும் கைப்பற்ற முடியாது. இங்குள்ள ஒவ்வொருவரும் எம்எல்ஏ தான்… கட்சி பொதுச்செயலாளர் தான். அதிமுக.,வின் வெற்றி, கட்சி நிர்வாகிகள் அனைவரையும் சாரும். கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு ஆட்சியில் அமர்ந்திருக்கும் திமுக, இதுவரை 10 சதவீத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. அதிமுக கொண்டுவந்த திட்டங்களையும் நிறுத்திவிட்டது.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமை தொகை நிறுத்தப்படும் என பொய் பிரசாரம் செய்கின்றனர்; நம்பாதீர்கள். நிச்சயம் அதிமுக ஆட்சிக்கு வந்தால் நிறுத்தப்படாது; யாருக்காவது நிறுத்தப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுக.,வில் உள்ள ஒவ்வொருவரும் தங்களை வேட்பாளராக நினைத்து ஓட்டு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். திமுக.,வில் அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்களாக இருப்பவர்களில் பலர் அதிமுக.,வில் இருந்து சென்றவர்களே. இப்படி அதிமுக அடையாளம் காண்பித்து, கட்சிக்கு துரோகம் செய்து திமுக.,வில் இணைந்தவர்களுக்கு இந்த தேர்தலில் பாடம் கற்பிக்க வேண்டும்’’ இவ்வாறு அவர் பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal