தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அரக்கோணம் வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து வேலூர் கோட்டை மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியிருப்பதாவது: மோடி ஒரு பார்ட்டைம் அரசியல்வாதி. தேர்தல் வந்துவிட்டதால் தமிழகத்திற்கு வருகிறார். பொய்களையும் அவதூறுகளையும் துணைக்கு அழைத்துக் கொண்டு வருகிறார். தேர்தல் முடிந்ததும் தமிழகத்தின் பக்கமே வரமாட்டார். அதிமுக ஆட்சியில் இருந்த போது சிறுபான்மையின மக்களின் முதுகில் குத்தினார் எடப்பாடி பழனிசாமி. இப்போது பாஜகவுடன் கள்ளத்தனமாக கூட்டணி வைத்துக் கொண்டு சிறுபான்மையினர் மீது அக்கறை வந்தது போல் நடிக்கிறார். நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்த எடப்பாடி பழனிசாமி, “இந்த சட்டத்தால் எந்த முஸ்லிமும் பாதிக்கப்படவில்லை” என அட்டர்னி ஜெனரல் ரேஞ்சுக்கு லா பாயிண்ட் பேசினார்.

பதவி சுகத்தை அனுபவிக்க நமது தமிழ்நாட்டு மாணவர்களை நீட் தேர்வை எழுத வைத்தவர் பழனிசாமி. அது போல் விவசாயிகளுக்கு பாதகமான 3 வேளாண் சட்டங்களையும் அவர் ஆதரித்தார். உழவர்களின் துயரத்தை பார்த்து ரசித்துக் கொண்டே பச்சைத் துண்டு போட்டு பச்சை துரோகம் செய்தார் எடப்பாடி பழனிசாமி. மக்கள் விரோத சட்டங்கள் கொண்டு வந்த போது பாஜகவின் காலில் விழுந்து கிடந்தார். இத்தனையும் செய்துவிட்டு கரகாட்டக்காரன் படத்தில் வரும் நாதஸ் திருந்திட்டான் என்ற கவுண்டமணி காமெடி வருமே அது போல் பேசிக் கொண்டு இப்போது வாக்கு கேட்டுக் கொண்டு இருக்கிறார்.

சொரணையும் சுயமரியாதையும் இல்லாத பழனிசாமி போன்றில்லாமல் எந்த நிலையிலும் மக்கள் விரோத பாஜக அரசை, திமுக எதிர்க்கும். போகும் ஊருக்குத் தகுந்தாற் போல் உடை அணியும் மோடி அந்த ஊரையும் ஊர் மக்களையும் அவர்கள் மொழியையும் பண்பாட்டையும் மதிக்கிறாரா என்றால் அதுதான் இல்லை. சமஸ்கிருதத்திற்கு நிதியை அள்ளிக் கொடுத்துவிட்டு அன்னை தமிழுக்கு கிள்ளி கூட தர மறுக்கிறார். கூட்டாட்சி என சொல்லவிட்டு காட்டாட்சி நடத்துகிறார். பொய் கதைகளை சொல்லி அதன் மூலம் தேர்தல் ஆதாயம் கிடைக்குமா என தேடுகிறார். தேன் கூட்டில் கை வைத்தது போல் கச்சத்தீவு பிரச்சினையில் கை வைத்து பாஜக மாட்டிக் கொண்டு தவிக்கிறது.

2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த போது உச்சநீதிமன்றத்தில் என்ன சொன்னது? “கச்சத்தீவு மீண்டும் வேண்டும் என்றால் இலங்கையுடன் போரில்தான் ஈடுபட வேண்டும்” என்றது. இந்த 10 ஆண்டு காலத்தில் பிரதமர் மோடி எத்தனை முறை இலங்கைக்கு பயணம் செய்துள்ளார். அப்போதெல்லாம் ஒரு முறையாவது அவர் கச்சத்தீவு குறித்து பேசியிருப்பாரா? இலங்கை அதிபரை சந்திக்கும் போதெல்லாம் கச்சத்தீவு இந்தியாவுக்குத்தான் சொந்தம் என சொல்லியிருக்கிறாரா, அப்போதெல்லாம் கச்சத்தீவு மோடியின் நினைவுக்கு வரவில்லை, சீன ஆக்கிரமிப்பு குறித்து என்றாவது வாய் திறந்தாரா. அருணாச்சலில் 30-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு சீன மொழியில் பெயர்களை வெளியிட்டிருக்கிறது சீனா, இதற்கு என்ன சொல்ல போகிறார்கள்?

இலங்கையைக் கண்டிக்கவும் துணிச்சல் இல்லை. சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இந்த லட்சணத்தில் கச்சத்தீவு குறித்து பேசலாமா. பிரதமர் மோடி போடும் நாடகம் எல்லாம் இன்னும் சிறிது நாட்களுக்குத்தான் என்பதை எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன். தேர்தல் தேதி நெருங்க நெருங்க அவரது முகத்தில் தோல்வி பயம் கண் கூடாக தெரிகிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.





By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal