புதுச்சேரியில் தமிழக அமைச்சர் உதயநிதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்தி லிங்கத்தை ஆதரித்து வில்லியனூர், மரப்பாலம் மற்றும் அண்ணாசிலை சதுக்கம் ஆகிய இடங்களில் பேசினார். உதயநிதி பேச தொடங்கிய போது, எல்லாரும் நல்லா இருக்கீங்களா, நீங்க திரும்ப கேட்க மாட்டீங்களா என கேட்டார். அப்போது தொண்டர்கள் நல்லா இருக்கீங்களா? என கோஷ மிட்டனர். அதற்கு பதிலளித்த உதயநிதி, ஏதோ சுமாரா இருக்கேன். நீங்க இருக்கும்போது எனக்கு என்ன கவலை? என்றார்.
உதயநிதி பேச தொடங்கிய போது, தி.மு.க.-காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரிய கொடியை ஆட்டிக் கொண்டே இருந்தனர். தான் பேசி முடிக்கும் வரை கட்சி கொடியை கீழே இறக்கும்படி உதயநிதி கேட்டுக் கொண்டார். இதனால் கூட்டணி கட்சியினர் அப்செட் ஆகினர். இருப்பினும் அனைத்து கொடியையும் இறக்கிவிட்டு உதயநிதி பேச்சை கேட்டனர். பிரசாரத்தில் வழக்கம் போல உதயநிதி எய்ம்ஸ் செங்கல்லை எடுத்து காட்டுவார். அதுபோல் புதுச்சேரி பிரசாரத்தில் எய்ம்ஸ் கல்லை காட்டுவார் என்று தொண்டர்கள் எதிர்பார்த்து கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து எய்ம்ஸ் செங்கல் புதுச்சேரி வரை பேமஸ் ஆகிவிட்டதா? எனக்கேட்டு செங்கல்லை எடுத்துக்காட்டிய உதயநிதி நீங்கள் காட்ட சொன்னதால்தான் கல்லை காட்டுகிறேன். இந்த கல்லுக்கு அவ்வளவு டிமாண்ட். நான் காட்டினது கல்லு, அவர் காட்டினது என பிரதமர் மோடியுடன் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோவை எடுத்து காட்டினார். மரப்பாலத்தில் பேசும் போது, தொண்டர் ஒருவர் ஆபாசமாக பேசினார். அப்போது உதயநிதி, நீ கெட்ட வார்த்தையில் பேசிட்டு போய்விடுவாய், போலீஸ் என்மீது வழக்கு போடும். ஆனால் அதற்காக நான் பயப்பட மாட்டேன் என்றார்.