தமிழகத்தைப் பொறுத்தளவில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வை விட அ.தி.மு.க. 33 இடங்களில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. 5 தொகுதிகளிலும், புதியதமிழகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ‘ஸ்டாலின்தான் வர்றாரு… விடியல் தரப்போறாரு…’ என்ற வாசகத்தை மக்கள் மனதில் கொண்டு சென்று தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் கடந்துவிட்டன.
இந்த நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்…!’ எனும் பிரச்சார யுக்தியை எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், ‘‘அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே… உங்கள் எண்ணங்களின் தேவைகளின் பிரதிபலிப்பே அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை.
வெற்று பிம்பங்களோ…. நடைமுறைக்கு சாத்தியமில்லாததையோ நாங்கள் அறிவிக்கவில்லை. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நடைமுறைக்கு சாத்தியமான வற்றையே தேர்தல் அறிக்கையாக அளித்து, திருச்சியில் இருந்து உங்களை சந்திக்க புறப்பட்டிருக்கிறேன்…
நம் மாநிலத்திற்கு எதிரான சட்டம் ஒழுங்கு சீர்குலைவு… மாநில உரிமைகள் பறிப்பு… அதிகரிக்கும் போதைப் பொருள் புழக்கத்தையும்…. பிரிவினைவாதத்தையும் போக்க ‘ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்’ என்று பதிவிட்டிருக்கிறார்.
எடப்பாடியின் தேர்தல் வியூகம் குறித்து அ.தி.மு.க.வில் உள்ள சீனியர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணியின் மாநிலச் செயலாளர் ராஜ் சத்தியன் தலைமையிலான டீம் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக இரவு பகலாக உழைத்து வருகிறார்கள்.
‘ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்…’ என்ற வாசகமும் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியினர் உருவாக்கியதுதான்! தி.மு.க.வின் தவறுகளை சுட்டிக்காட்டவும், நடைமுறைக்கு சாத்தியமில்லாத தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் பணியிலும் அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி ஈடுபட்டிருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியும், அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணியின் பணிகளை பாராட்டியதோடு, இதே உத்வேகத்துடன் தேர்தல் முடியும் வரை பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்’’ என்றனார்.
தமிழக மக்கள் ‘ஓற்றை விரல் ஓங்கி அடிப்பார்களா..?’ என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!