ஈரோட்டில் முன்னாள் மத்திய அமைச்சரும், எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் ஆணையம் மோடியின் கொத்தடிமையாக, கைப்பாவையாக செயல்படுகிறது. கோவையில், அண்ணாமலை தாக்கல் செய்த வேட்பு மனுவில் பல தவறுகள் செய்துள்ளார். கேட்ட விவரங்களை முழுமையாக கொடுக்கவில்லை. எனவே அவரது வேட்பு மனுவை ஏற்க கூடாது என பாஜக தவிர அனைத்து கட்சியினரும் தேர்தல் அலுவலரிடம் கேட்டுக் கொண்டனர். அதை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு தலைமை தேர்தல் கமிஷனில் இருந்து அழைப்பு வந்ததை அடுத்து அண்ணாமலை வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வாக்களர்களுக்கு கொடுக்க பல கோடி சேலைகளை குடோனில் பதுக்கியுள்ளார். இதனை ஈரோடு போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் தற்போதுவரை அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈரோடு அதிமுக வேட்பாளர் வங்கிகளில் 250 போலி கணக்குகளை ஆரம்பித்து வைத்துள்ளார். அந்த கணக்குகள் மூலம், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. எனவே ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வேட்பாளரை கைது செய்ய வேண்டும்.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கூடுதல் சம்பளம் வழங்குவதாக தேர்தல் ஆணையத்தின் அனுமதியின் பேரில் அறிவித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இதுபோன்ற அறிவிப்பு வெளியிடுவது அயோக்கியத்தனம். எனவே தேர்தல் ஆணையம் பிரதமர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.