தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.  இந்த நிலையில் தருமபுரி தி.மு.க. வேட்பாளர் மணி, கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து தருமபுரியில் இன்று மாலை நடைபெறும் பிரசாரக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஆதரவு திரட்டுகிறார்.

இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் சேலம் காமலாபுரத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகிறார். பின்னர் தருமபுரி தடங்கம் பகுதிக்கு செல்லும் அவர் அங்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். தொடர்ந்து இரவில் சேலம் வரும் மு.க.ஸ்டாலின் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். நாளை (30-ந்தேதி) காலையில் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். தொடர்ந்து மாலை 6 மணியளவில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார்.

அங்கு சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் மலையரசன் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார். இதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம்.செல்வகணபதி ஆகியோர் செய்துள்ளனர். சேலம் பிரசார பொதுக்கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் ஈரோட்டிற்கு புறப்பட்டு செல்கிறார்.

இதையொட்டி சேலம் விமான நிலையம், பெத்தநாயக்கன்பாளையத்தில் கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் சேலத்தில்  அவர் தங்கும் மாமாங்கம் பகுதிகளிலும் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். முதலமைச்சர் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal