தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எம்.பி.யாக இருக்கும் மத்திய மந்திரி எல்.முருகனையும் கவர்னராக இருந்த டாக்டர் தமிழிசையையும் தேர்தலில் போட்டியிட வைத்துள்ளீர்கள். ஆனால் தென்சென்னையில் பிறந்த ஜெய்சங்கரையும் திருச்சியில் பிறந்த நிர்மலா சீதாராமையும் போட்டியிட வைக்கவில்லை.  இதற்கான உண்மையான காரணத்தை பா.ஜனதா தெளிவுபடுத்த வேண்டும். 

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு, சமூக பாதுகாப்பு அளிக்கப்படும். வயதான அமைப்புசாரா  தொழிலாளர்களுக்கு பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்படும். இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கிறது பா.ஜனதா.  ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பை வற்புறுத்தி; சமூக நீதி பற்றி பேசி வரும் பாட்டாளி மக்கள் கட்சி பா.ஜனதா உடன் கூட்டணி அமைத்துள்ளது.  அந்தக் கட்சி சமூக நீதிக்கு எதிராக சென்று கொண்டிருக்கிறது.

கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும்போது தொகுதிகள் மாறுவது தவிர்க்க முடியாது. அந்த  வகையில் திருச்சி தொகுதி மாறியது. எங்கள் கட்சியின் மூத்த தலைவரான திருநாவுக்கரசருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காவிட்டாலும் அவருக்கு பெரிய பதவியை கட்சி வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.



By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal