பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க. இணைந்ததை கண்டித்து அக்கட்சியின் நிர்வாகி போஸ்டர் ஒட்டி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தேனி மாவட்டம் கம்பம் நகர அ.ம.மு.க. துணைச் செயலாளராக இருந்தவர் சாதிக்ராஜா. இவர் கம்பம் நகர் முழுவதும் பரபரப்பு போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார். அந்த போஸ்டரில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் சிறுபான்மையினரை அழிக்கும் நோக்கத்துடனும் தமிழகத்தை வஞ்சிக்கும் பாசிச மதவாத கட்சியான பா.ஜ.க.வுடன் அ.ம.மு.க. கூட்டணி வைத்ததால் கட்சியில் இருந்து விலகிக்கொள்கிறேன்.
மேலும் அ.ம.மு.க. கட்சியில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த முக்கிய பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகள் சிந்தித்து செயல்படுங்கள் என்ற வாசகங்களுடன் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து தேனி அ.ம.மு.க. நகர செயலாளர் மணி கூறுகையில், துணைச் செயலாளராக இருந்த சாதிக் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறி கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதியே பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சலீம் என்பவர் நகர துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் மத ரீதியாக பிளவுபடுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டிய சாதிக் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.