பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். ஓட்டு குறைந்தால் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள் பதில் சொல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதன் காரணமாக ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் ஒன்றிய பகுதி கழக செயலாளர்களிடம் அதிக ஓட்டு பெற்றுத் தருமாறு செயல் வீரர்கள் கூட்டத்தில் கூறி வருகின்றனர்.

அதே போல் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அதிக ஓட்டு பெற்றுத்தரும் வட்ட கழக செயலாளர்களுக்கு 1 பவுன் தங்க மோதிரம் பரிசளிப்பதாக கூறி வருகின்றனர். காஞ்சிபுரம் தனி தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து செய்யூர் அருகே உள்ள புத்தூர் கூட்டுச்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் சுந்தர் பேசும் போது கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேசியதாவது:- கடந்த 2021-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் செய்யூர் வி.சி. எம்.எல்.ஏ. பாபு 83 ஆயிரம் ஓட்டு பெற்று வெற்றியடைந்தார்.

தற்போது நடைபெறும் இந்த பாராளுமன்றத் தேர்தலில் செய்யூர் சட்டசபை தொகுதியில் இருந்து 1 லட்சம் ஓட்டுகள் பெற்றுத் தந்து வேட்பாளர் செல்வத்தை வெற்றி பெற வைத்தால் செய்யூர் எம்.எல்.ஏ.வுக்கு 5 பவுன் நகை வெகுமதியாக வழங்கப்படும் என வாக்குறுதி தருகிறேன். இவ்வாறு அவர் பேசினார். இதே போல் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் கட்சி மேலிடத்தில் நல்ல பெயர் எடுப்பதற்காக அதிக ஓட்டு பெற்றுத் தரும் ஒன்றிய, நகர செயலாளர்களுக்கு தங்க மோதிரம் தருவதாக கூறி வருவது கட்சி நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal