கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே காங்கிரஸ்,  பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கிவிட்ட நிலையில், தற்போது அந்த பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்டு கட்சிகள் அறிவித்துவிட்டன. இதையடுத்து கட்சி வேட்பாளர்கள் தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கட்சி தலைவர்கள் ஏப்ரல் மாதம் தொடங்கியதும், கேரள மாநிலத்தில் பிரசாரம் செய்ய உள்ளனர்.

கேரள மாநிலத்தில் ராகுல்காந்தி எம்.பி.யாக உள்ள வயநாடு தொகுதியே முக்கியமான தொகுதியாகும். அந்த தொகுதியில் இந்த முறையும் காங்கிரஸ் கட்சி  சார்பில் ராகுல்காந்தியே போட்டியிடுகிறார். மேலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளரான டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவும் வயநாடு தொகுதியில் களமிறங்குகிறார். காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டுகட்சிகள் இந்திய அளவில் ஒரே கூட்டணியில் இருக்கும் நிலையில், வயநாடு தொகுதியில் இருகட்சிகளும் தனித்தனியாக களம் காணுகின்றன.

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? என்று தெரிந்துவிட்டநிலையில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடப்போவது யார்? என்பது இதுவரை தெரியவில்லை. பாரதிய ஜனதா வெளியிட்ட நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலில் அது பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை. வயநாடு தொகுதி மட்டுமின்றி, கேரளாவில் உள்ள கொல்லம், எர்ணா குளம், ஆலத்தூர் ஆகிய தொகுதிகளின் வேட்பாளர் விவரங்களை பாரதிய ஜனதா வெளியிடவில்லை. இதனால் இந்த தொகுதிகளில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் யார்? என்ற விவரம் தெரியாமல் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளனர்.

வேட்பாளர்கள் எப்படியும் அறிவிக்கப்பட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையில், அந்த தொகுதிகளில் பல இடங்களில் பாரதிய ஜனதா கட்சியினர், வேட்பாளர் படத்துக்கு மட்டும் இடம் விட்டுவிட்டு சுவர் விளம்பரம் செய்திருந்தனர். அந்த விளம்பரங்கள் தற்போது வரை வேட்பாளர்களின் படம் இன்றியே காணப்படுகின்றன. பாரதிய ஜனதா வெளியிடும் ஐந்தாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் கேரள மாநிலத்தில் அறிவிக்கப்படாமல் உள்ள தொகுதிகளின் வேட்பாளர்  விவரங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal