விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ‘பாரதிய ஜனதா கட்சி மிக தந்திரமாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் காலூன்றுவதற்காக அவர்கள் புதிய யுக்தியை கையாள்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சிறிய கட்சிகளிடம் சேர்ந்து கொண்டு ஊடுருவுகிறார்கள். பிறகு அந்த கட்சிகளின் வாக்கு வங்கியை சீர் குலைத்து சூறையாடி விடுவதை பா.ஜ.க. வழக்கத்தில் வைத்திருக்கிறது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் 2-வது இடத்தை பிடிப்பதை வழக்கத்தில் வைத்திருக்கிறது. அ.தி.மு.க. இதை புரிந்து கொள்ள வேண்டும். தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அ.தி.மு.க.வினர் இதை புரிந்து கொள்ளாவிட்டால் அவர்களும் நாளடைவில் தங்களது வாக்கு வங்கியை இழக்க நேரிடும். பாரதிய ஜனதாவின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. பலியாகாது என்று நம்புகிறேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகும் அ.தி.மு.க. வின் வாக்கு வங்கி நிலை குலையாமல் இருக்கிறது. அதுதான் அந்த கட்சியின் பலம். நாங்கள் தி.மு.க.வுடன் கொள்கைரீதியாக மட்டுமே உடன்பாடு வைத்திருக்கிறோம். பா.ஜ.க. தலைவர்கள் மத ரீதியிலான பிரசாரத்தை மட்டுமே செய்கிறார்கள். அவர்கள் என்ன சாதனைகள் செய்தார்கள் என்று சொல்வதே இல்லை’, இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal