பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி நெல்லை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம் ஏதேனும் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்டறிய மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் ஆங்காங்கே நின்று வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளிலும் நிலையான குழுக்களும் சோதனை சாவடி பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நேற்று இரவு நிலையான குழுவினர் அதன் அதிகாரி செல்லத்துரை தலைமையில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் அந்த வழியாக நெல்லை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.62 ஆயிரத்து 400 பணம் இருந்தது. அந்த பணம் குறித்து காரில் வந்த பாளை பெருமாள்புரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் விசாரித்தபோது, பத்தமடை பகுதியில் டாக்டராக வேலை பார்ப்பதாகவும், அதற்கான மாத ஊதியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்குரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதனால் அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், பாளை தாசில்தார் சரவணனிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காட்டிய பின்னர் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு ரமேசிடம் தெரிவித்தனர்.