தமிழ்நாடு காங்கிரஸ் கடந்த 2019 மக்களவை தேர்தலில் திருச்சி உள்ளிட்ட 9 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் திருச்சி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் போட்டியிட்டு 6 லட்சத்து 26 ஆயிரம் வாக்குகள் (59 சதவீதம்) பெற்று, 4 லட்சத்து 64 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2024 மக்களவை தேர்தலிலும் திமுக கூட்டணியில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் திருச்சி தொகுதி கோரப்பட்டது. ஆனால் திமுக தரப்பு, தாங்கள் நடத்திய கள ஆய்வில் காங்கிரஸூக்கு அங்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இல்லை என தெரிவித்து, அத்தொகுதியை தர மறுத்து மாற்றுத்தொகுதியாக மயிலாடுதுறையை ஒதுக்க முன்வந்தது.

இதற்கிடையில் மதிமுகவுக்கு திமுக ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறியது. அப்படி எனில் அந்த தொகுதி திருச்சி தொகுதியாக இருக்க வேண்டும் என்று வைகோ நிபந்தனை விதித்திருந்தார்.

இதனால் இந்த தேர்தலில் காங்கிரஸூக்கு திருச்சி தொகுதி இல்லை என்பதும், திருநாவுக்கரசருக்கும் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருக்காது என்பதும் ஏறக்குறைய உறுதியானதாக பேசப்பட்டது.

சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர்கள் பங்கேற்ற இணையவழி கூட்டத்தில் பேசிய திருநாவுக்கரசர், திருச்சி தொகுதிக்கு பதில் திமுக மாற்று தொகுதியை கொடுத்தாலும் அங்கு போட்டியிட எனக்கு ஏன் வாய்ப்பளிக்கக் கூடாது என கேட்டு தனது அதிருப்தியை தெரிவித்து ஆதங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அதிகாரப்பூர்வமாக திருச்சியை மதிமுகவுக்கு ஒதுக்கியும், அதற்கு மாற்றாக காங்கிரஸூக்கு மயிலாடுதுறை தொகுதியை ஒதுக்கியும் திமுக அறிவித்தது.

இந்நிலையில் திருச்சி தொகுதி காங்கிரஸூக்கு கிடைக்காதது தொடர்பாக அத்தொகுதியின் தற்போதைய எம்பி திருநாவுக்கரசரிடம் கேட்டபோது, 4 லட்சத்து 64 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற, தற்போதைய எம்பி நான். அவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றி பெற வைத்த அத்தொகுதி மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதைப்பற்றி அவ்வளவுதான் சொல்ல முடியும் என்றார்

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal