மக்களவைத் தேர்தல் 2024க்கான திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நாளை வெளியிடவுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. எனவே, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக தனது கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது.

அதன்படி, கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு 10, இந்திய கம்யூனிஸ்டுக்கு 2, மதிமுகவுக்கு 1, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 2, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.

முன்னதாக, வேட்பாளர்கள் தேர்வுக்கான விருப்பமனுவை கடந்த 7ஆம் தேதி வரை பெற்ற திமுக, விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணலையும் நடத்தியுள்ளது. திமுக கூட்டணியில் போட்டியிடும் மற்ற கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்ட நிலையில், மதிமுக, காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது. இறுதியாக, நேற்று காலையில் மதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் 2024க்கான திமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நாளை வெளியிடவுள்ளார். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுகவின் தேர்தல் அறிக்கை மற்றும் 21 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட உள்ளார்.

மக்களவை தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் நேரடியாக களம் காண உள்ளது. அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் அறிக்கை நாளை வெளியாகவுள்ளது. முன்னதாக, திமுக கூட்டணியில் மதிமுக, இடதுசாரிகள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை தங்களது வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal