நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. எனவே, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக கூட்டணியில் எந்த பிளவும் இல்லாமல் அப்படியே உள்ளதால், கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை திமுக தலைமை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஆனால், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ளது. எனவே, இரு கட்சிகளும் தங்களது தலைமையில் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக கூட்டணியில் பாஜக பயணித்து வருகிறது. ஆனால், கடந்த மக்களவை, சட்டமன்றத் தேர்தலில் இக்கூட்டணி படு தோல்வியடைந்தது. அதிமுக மூலம் தமிழ்நாட்டில் கால் பதிக்க பாஜக முயற்சித்து வருவதாக அரசியல் நோக்கர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர். பாஜகவை முதுகில் தூக்கிக் கொண்டு சுமப்பதால்தான் தேர்தலில் தோல்வியடைவதாக அதிமுகவுக்குள்ளேயே எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.

இந்த பின்னணியில் அதிமுக தலைவர்களுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மோதல் போக்கை கையாண்டார். இதனை காரணமாக வைத்து பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டது பாஜக. ஆனால், தேர்தலை மனதில் வைத்தே கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின. மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் தமிழ்நாட்டில் அது எடுபடாது எனவும், இருகட்சிகளுக்குமே அது பாதகமாக முடியும் என்பதால், தேர்தல் நேரத்து நாடகமாகவே அதிமுக – பாஜக கூட்டணி முறிவு பார்க்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதேசமயம், அதிமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க பாஜக முயற்சித்தது. ஆனால், ஜி.கே.வாசன், பச்சமுத்து, சரத்குமார், ஏசிஎஸ், ஜான்பாண்டியன், ஓபிஎஸ், டிடிவி போன்றோரை மட்டுமே பாஜகவால் கூட்டணியில் சேர்க்க முடிந்தது. பிரதான கட்சிகளான கணிசமான வாக்கு வங்கி வைத்திருக்கும் பாமக, தேமுதிகவை பாஜகவால் கூட்டணிக்குள் கொண்டு வர முடியவில்லை.

முன்னதாக, அதிமுகவுக்காக கூட்டணி கதவுகள் திறந்திருப்பதாக அமித்ஷா வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். ஆனால், பாஜகவுடன் கூட்டணிக்கு செல்ல எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்து தெரிவித்து விட்டார். கள நிலவரம் அறிந்து அடுத்தடுத்து பாஜக இறங்கி வர எடப்பாடி பழனிசாமியோ கூட்டணி கிடையாது என்பதில் உறுதியாக உள்ளார். இதனால், ஒருகட்டத்தில் இரட்டை இலையை ஓபிஎஸ் மூலம் முடக்குவோம் என பாஜக எச்சரிக்கையும் விடுத்து பார்த்ததாக கூறப்படுகிறது. ஆனால், எடப்பாடி அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை.

எனவே, மக்களவைத் தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ஒத்துவராத எடப்பாடி பழனிசாமியிடம் பாஜக ரகசியமாக வேறு ஒரு டீல் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் சீட் வாங்கி 9 தொகுதிகளிலாவது வெற்றி பெற்று விட பாஜக முனைப்பு காட்டி வந்தது. ஆனால், கூட்டணி முறிவால் அது சாத்தியமில்லை என்பது பாஜக மேலிடத்துக்கு நன்றாக தெரியும். தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளும் அதிமுக கூட்ட்ணியில் இணைவது உறுதியாகியுள்ளது.

எனவே, குறிப்பிட்ட சில தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக எம்.பி.க்களை டெல்லிக்கு அனுப்ப அக்கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி, பாஜக திட்டமிட்டுள்ள ஒற்றை இலக்கத்திலான சில தொகுதிகளில் வலுவான வேட்பாளர்களை நிறுத்தாமல் டம்மியான வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்; அந்த தொகுதிகள் வெற்றி பெற பாஜகவுக்கு அதிமுக உதவ வேண்டும் என அதிமுகவுடன் பாஜக ரகசிய டீல் பேசியுள்ளாதாக தெரிகிறது. அதற்கு இரட்டை இலை எந்த சூழ்நிலையிலும் முடக்கப்படக்கூடாது அது தங்கள் வசமே இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் பாஜகவுக்கு அதிமுக கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal