அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார். பாரதிய ஜனதா கூட்டணியில் டி.டி.வி.தினகரனும் சேர முடிவு செய்துள்ளார். இருவரும் ஒன்றாக சேர்ந்து எடப்பாடி பழனிசாமி நிறுத்தும் அ.தி.மு.க. வேட்பாளர்களை தோற்கடிப்பதற்கு காய் நகர்த்தி வருகிறார்கள். பாரதிய ஜனதா கூட்டணியில் இருவருக்கும் தலா 40 தொகுதிகள் வரையில் ஒதுக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதில் டி.டி.வி.தினகரன் அ.ம.மு.க. சின்னமான குக்கர் சின்னத்தில் போட்டியிட உள்ளார். கட்சியும், கொடியும் இல்லாமல் தவித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் எந்த சின்னத்தில் போட்டியிடப் போகிறார்? என்பதுதான் அரசியல் களத்தில் பெரிய கேள்வியாக மாறி இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிட்டால்தான் 4 தொகுதிகளை ஒதுக்க முடியும் என்றும் வேறு சின்னத்தை நீங்கள் விரும்பினால் 2 தொகுதிகளை மட்டுமே தர முடியும் என்றும் பாரதிய ஜனதா சார்பில் ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஓ.பி.எஸ். இதனை ஏற்க மறுத்து நிராகரித்துவிட்டார். அ.தி.மு.க.வை மீட்க இப்போதும் போராடி வருகிறோம். இந்த சூழலில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் அது எதிர்கால அரசியலை பாதிக்கும். எனவே தனி சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்று ஓ.பி.எஸ்.,-பாரதிய ஜனதா நிர்வாகிகளிடம் தெரிவித்து உள்ளார். இதனை பாரதிய ஜனதா நிர்வாகிகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளாமலேயே உள்ளனர். இதற்கிடையே பாரதிய ஜனதாவுடனான தொகுதி பங்கீட்டு விவகாரத்தில் ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் இடையே  லேசான சலசலப்பு மற்றும் மோதல் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக தேனி, பெரியகுளம் ஆகிய 2 பாராளுமன்ற தொகுதிகளையும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். இருவருமே பாரதிய ஜனதாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த 2 தொகுதிகளும் இருவருக்குமே செல்வாக்கான தொகுதிகள் என்பதால் எப்படியும் தங்களுக்கே கேட்டுப் பெற்றுவிட வேண்டும் என்று இருவருமே முட்டி மோதிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் ஓ.பன்னீர்செல்வம், தேனி தொகுதியில் இருந்து மாறி தனது மகன் ரவீந்திரநாத்தை மதுரை தொகுதியில் போட்டியிட வைக்கவும் திட்டம் வகுத்து வருகிறார். இதுபற்றியும் பா.ஜ.க. மேலிடத்துடன் அவர் ஆலோசித்து வருகிறார்.

மதுரையில் பா.ஜ.க. ஆதரவுடன் போட்டியிட்டால் சவுராஷ்டிரா மக்கள் ஆதரவுடன் மற்ற சமுதாய வாக்குகளையும் எளிதாக பெற்றுவிடலாம் என்ற கணக்குடன் இந்த முயற்சியை ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டு வருகிறார். அதேபோல் செல்வாக்கு மிகுந்த ராமநாதபுரம் தொகுதியை குறிவைத்தும் ஓ.பன்னீர்செல்வம் தனது மகனுக்காக காய் நகர்த்தி அவரை எப்படியாவது வெற்றி பெறச்செய்து எம்.பி.யாக்க வேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal