தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு மகளிருக்கு பல நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாதந்தோறும் ரூ.1000, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் பல்வேறு மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

அதிலும் கலைஞர் உரிமைத் தொகை மூலம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் திட்டமானது நாடு முழுவதும் பெரும் பாராட்டை பெற்று வருகிறது. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத் தொகையையும் சேர்த்துக்கொண்டனர். இந்த திட்டம் மூலம் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பணத்தை பெண்கள் தங்கள், தங்கள் குழந்தைகள், வீட்டுக்கு தேவையான சிறுசிறு பொருட்களை கூட வாங்கிக்கொள்ள முடியும். பலரும் பாராட்டும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ள இந்த திட்டத்தை நடிகையும், பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ ‘பிச்சை’ என்று கூறி கொச்சைப்படுத்தும் விதமாக பேசியிருந்தார்.

இவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. மேலும் தமிழ்நாடு முழுவதும் பெண்கள் குஷ்புவை கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில்தான் தென்காசி மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை குறித்து கொச்சையாக பேசிய குஷ்புக்கு முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தலைமையில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் வாயாலேயே வடை சுட்டுவிட்டுச் செல்லும் பிரதமர் மோடிக்கு முக்கூடல் பேரூராட்சி சார்பில் நிஜ வடை சுடும் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா பொது மக்களுக்கும், தி.மு.க.வினருக்கு வடை கொடுத்து மோடிக்கு தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

இந்நிகழ்ச்சிக்கான எற்பாடுகளை முக்கூடல் பேரூர் செயலாளர் இலட்சுமணன், பாப்பாகுடி ஒன்றிய செயலாளர் மாரிவண்ணமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal