திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் இதுதான் என்று சில தொகுதிகள் வெளியாகி உள்ளது. அதன்படி கரூர், திருச்சி, தேனி ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பு இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேனி, கன்னியாகுமரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, சிவகங்கை, விருதுநகர், கரூர் மற்றும் திருச்சி என 9 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 10 இடங்களில் போட்டியிட்டது. இதில், தேனி தொகுதியை தவிர எஞ்சிய 9 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி கடந்த முறை வெற்றி பெற்றது.

காங்கிரஸ் இந்த முறை 10 தொகுதிகளை பெற்றுள்ள போதிலும், கடந்த முறை காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட கரூர், திருச்சி, தேனி ஆகிய 3 தொகுதிகள் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து கைமாற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சி லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ள 10 தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. அந்த தொகுதிகளில் யார்-யார்? போட்டியிட உள்ளனர் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

கன்னியாகுமரியில் விஜய் வசந்த், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், சிவகங்கையில் கார்த்தி ப.சிதம்பரம், கிருஷ்ணகிரியில் டாக்டர் செல்லக்குமார் ஆகியோர் கடந்த தேர்தலை போல் இந்த தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆரணியில் தற்போது எம்.பி.யாக இருந்து வரும் டாக்டர் விஷ்ணுபிரசாத் அல்லது தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் வக்கீல் சுதா ராமகிருஷ்ணன் போட்டியிட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

திருவள்ளூர் தொகுதியில் ஜெயக்குமார் மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதில் சசிகாந்த் செந்தில் அல்லது முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் போட்டியிடக்கூடும் என்கிறார்கள். அதேபோல, தேனி தொகுதிக்கு பதிலாக மயிலாடுதுறை ஒதுக்கப்பட்டு அதில் அகில இந்திய தொழில் வல்லுனர்கள் காங்கிரஸ் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கரூர் தொகுதிக்கு பதில் ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டு அதில் ஜோதிமணியும், திருச்சி தொகுதிக்கு பதில் கடலூர் ஒதுக்கப்பட்டு அதில் திருநாவுக்கரசர் அல்லது வேறு யாராவது வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்றும் சொல்கிறார்கள். அதே நேரத்தில், புதுச்சேரியில் ஏற்கனவே எம்.பி.யாக இருக்கும் வைத்திலிங்கமே போட்டியிட உள்ளதாகவும் சொல்கிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் பட்டியல் விரைவில் வெளியாகக்கூடும் என்று சொல்கிறார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal