கொடைக்கானலில் குணா குகை பகுதிக்குள் தடையை மீறி நுழைந்த 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
சமீபத்தில் வெளியான கேரள படத்தில் ( மஞ்சும்மல் பாய்ஸ் ) குணா குகையை சுற்றியே திரைக்கதை அமைந்துள்ளது. இதையடுத்து, வழக்கத்தை விட அதிகமான பயணிகள் குணா குகையை காண குவிந்து வருகின்றனர். நேற்று கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த விஜய், பாரத், ராணிப் பேட்டை ரஞ்சித் ஆகிய 3 பேரும் குணா குகை பகுதியில் பாதுகாப்பு வேலியைத் தாண்டிச் சென்று பாறையின் விளிம்பு பகுதியில் நின்று ஆபத்தான முறையில் புகைப்படம் எடுத்தனர்.
தகவல் அறிந்து வந்த வனத் துறையினர் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வனத் துறையினர் கூறும் போது, குணா குகை தடை செய்யப்பட்ட பகுதி என்பதாலும், இது போன்று யாரும் ஆர்வக்கோளாறில் தடையை மீறி குகை பகுதிக்கு செல்லக் கூடாது என்பதற்காகவும் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளை கண்காணிக்க குணா குகை பகுதியில் கூடுதலாக வனவர், வேட்டைத் தடுப்பு காவலாளிகள் நியமிக்கப்பட உள்ளனர்.