இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோவை மாவட்டம் அன்னூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

‘இந்தியாவில் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டுமெனில் பா.ஜனதா ஆட்சி அகற்றப்பட வேண்டும். இல்லையெனில் நாடு பேராபத்தை சந்திக்க வேண்டி வரும். இந்த தேர்தலை இந்தியா கூட்டணி கொள்கைரீதியாக எதிர்கொள்ளும். 3 பேர் அடங்கிய தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஒருவர் பதவி விலகிய நிலையில் தற்போது அருண்கோயல் என்பவரும் ராஜினாமா செய்து உள்ளார். எனவே தேர்தல் ஆணையத்தில் தலைவர் மட்டுமே உள்ளார். தேர்தல் ஆணையம் என்பது அரசியல் அமைப்பு சட்டம் வழங்கிய உரிமை. இதனை பிரதமர் மோடி கேள்விக்குறியாக்கி விட்டார்.

இதனால் வருகிற பாராளுமன்ற தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்குமா என்று சந்தேகம் எழுந்து உள்ளது. தேர்தல் பத்திரம் மூலம் பாரதிய ஜனதா பெரியளவில் ஆதாயம் பெற்று உள்ளது. மார்ச் 13-ந்தேதிக்குள் யார்-யாருக்கு தேர்தல் பத்திரம் வழங்கப்பட்டு உள்ளது என்பதை வலைத்தளங்களில் வெளியிட வேண்டும் எனற சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்திய பிறகும், பாரத ஸ்டேட் வங்கி கால அவகாசம் கேட்பது சரியல்ல.

கேரளா மாநிலத்தில் இந்தியா கூட்டணி மட்டும் தான் போட்டியிடுகிறது. மூன்றாவது அணி இல்லை. வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியும், கம்யூனிஸ்டு சார்பில் ஆனிராஜாவும் போட்டியிடுகிறார்கள். அங்கு ராகுல் காந்தி வெற்றி பெற்றாலும், ஆனி ராஜா வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி இந்தியா கூட்டணியின் வெற்றி தான்’. இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal