காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழு மாநிலம் வாரியாக காங்கிரஸ் நிர்வாகிகளிடமும், பொதுமக்களிடமும் கருத்துக்கள் கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகிறது. ப.சிதம்பரம் தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நேற்று டெல்லியில் இறுதி கட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. அதில் பல்வேறு வாக்குறுதிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இன்று (செவ்வாய்க் கிழமை) 2-வது நாளாக ப.சிதம்பரம் தலைமையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தியது.
இதில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படுகிறது. இந்த வார இறுதியில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்பு இருக்கிறது. நேற்று ராகுல்காந்தி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் இந்தியா முழுவதும் 78 துறைகளில் சுமார் 9.66 லட்சம் இடங்கள் காலியாக இருப்பதாக சுட்டிக்காட்டி இருந்தார். எனவே இதன் அடிப்படையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் பேருக்கு உடனடியாக அரசு வேலை தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.