கடந்த 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி 30 சதவீத வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தற்போதைய தந்தி டிவி லோக்சபா தேர்தல் கணிப்பு முடிவுகள், இரு கட்சிகளுக்கும் வாக்கு வங்கி அதிகரித்திருப்பதாக தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி, பாஜக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி இங்கு நிலவுகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்தாண்டு பிப்ரவரி வரை தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும், பல்வேறு தரப்பட்ட மக்களிடமும் தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் வெல்வது யார்?: உங்கள் தொகுதியில் வெற்றி பெறப்போவது யார் என்ற கேள்விக்கு மக்கள் அளித்துள்ள பதில்கள் சதவீதம்: திமுக கூட்டணி – 43% அதிமுக கூட்டணி 33% பாஜக கூட்டணி – 12% நாம் தமிழர் கட்சி – 8% மற்றவை – 4%

உங்கள் தொகுதியில் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள்? என்ற கேள்விக்கு மக்கள் அளித்துள்ள பதில் சதவீதம்: திமுக கூட்டணி – 42% அதிமுக கூட்டணி 30% பாஜக கூட்டணி – 13% நாம் தமிழர் கட்சி – 8% மற்றவை – 7%

கடந்த தேர்தல் ரிசல்ட்: கடந்த 2019 லோக்சபா தேர்தலை திமுக, கிட்டத்தட்ட இன்று இருக்கும் அதே கூட்டணிக் கட்சிகளோடு தான் இணைந்து சந்தித்தது. அப்போது, 53.15 சதவீத வாக்குகளை திமுக – காங்கிரஸ் கூட்டணி அள்ளி இருந்த நிலையில், தந்தி டிவி கணிப்பில் 42% மக்களே திமுக அணிக்கு வாக்களிப்போம் எனத் தெரிவித்துள்ளனர். அதேசமயம், கடந்த முறை, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியாக நின்றிருந்த நிலையில் மொத்தமாக 30 சதவீத வாக்குகள் பெற்றன. ஆனால், இப்போது அதிமுக கூட்டணி தனியாக 30% மற்றும் பாஜக கூட்டணி தனியாக 13% வாக்குகளைப் பெறும் என தந்தி டிவி கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

என்டிஏ கூட்டணி: அதிமுக – பாஜக மற்றும் பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டே மொத்தம் 30 சதவீத வாக்குகள் தான் வாங்கியிருந்த நிலையில், தற்போது, நான்கு முனைப் போட்டிக்கு மத்தியில் அதிமுகவுக்கு 30 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி வாக்கு சதவீதம்: தமிழ்நாட்டிஒ என்.டி.ஏ கூட்டணி ஓட்டுமொத்தமாக : 30.57% அதிமுக – 19.39% (20 தொகுதிகளில் போட்டியிட்டு) பாமக – 5.36% (7 தொகுதிகளில் போட்டியிட்டு) பாஜக – 3.66% (5 தொகுதிகளில் போட்டியிட்டு) தேமுதிக – 2.16% (4 தொகுதிகளில் போட்டியிட்டு)

அதிமுக – பாஜகவுக்கு லாபம்: கடந்த முறை அதிமுக கூட்டணி ஒட்டுமொத்தமாக 30% வாக்குகள் பெற்ற நிலையில், தற்போது அதிமுக பாஜக அணிகள் தனித்தனியாக நின்று ஒட்டுமொத்தமாக திமுக கூட்டணிக்கு நிகரான வாக்குகளைப் பெறுகின்றன. ஆக, தனித்து நிற்பது இரு கட்சிகளுக்கும் லாபம் என்ற நிலை உள்ளது.

பாஜக உடன் கூட்டணி அமைத்தால் அதிமுக சிறுபான்மை வாக்குகளை இழக்கிறது. அதேபோல, அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் பாஜக, மென் இந்துத்வா வாக்குகளை இழக்கிறது. இரு கட்சிகளும் தனித்தனியாக நிற்கும்போது, அதிமுக தங்கள் வாக்கு வங்கியை மீட்டெடுக்கிறது என்பதை உணர முடிகிறது.

அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என அண்ணாமலை எடுத்த முடிவும், இனி பாஜக வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி துணிந்து எடுத்த முடிவும் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் நன்மை தந்திருப்பதாகவே தெரிகிறது. மாறாக, இந்தக் கட்சிகள் தனியாக நிற்பதால், கடந்த முறை திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் இந்த முறை சிதறி இருக்கின்றன.

அதிமுக, பாஜக தனித்தனியாக போட்டியிடுவது இந்த இரு கட்சிகளுக்குமே லாபம் என்பதை உணர்த்துகிறது தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள். சேர்ந்து நின்று கடந்த தேர்தலில் பெற்றதை விட இந்த முறை இக்கட்சிகள் வாக்குகளை அள்ளுவதாகத் தெரிகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal